மத்தேயு 14

14
யோவான் ஸ்நானகனின் சிரச்சேதம்
1அக்காலத்திலே சிற்றரசனான ஏரோது,#14:1 ஏரோது – மகா ஏரோதின் மகனாகிய அந்திபாஸ், நான்கில் ஒரு பகுதியை ஆட்சி செய்தான் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். 2ஏரோது தனது ஏவலாட்களிடம், “இவன் யோவான் ஸ்நானகனே; இவன் திரும்பவும் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான். அதனாலேயே, இவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகின்றன” என்று சொன்னான்.
3தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு, ஏரோது ஏற்கெனவே யோவானைக் கைது செய்து, அவனை விலங்குகளால் கட்டி, சிறையில் அடைத்திருந்தான். 4ஏனெனில் யோவான் அவனிடம், “அவளை நீ வைத்திருப்பது நீதிச்சட்டத்திற்கு முரணானது” என்று சொல்லியிருந்தான். 5ஏரோது யோவானைக் கொலை செய்ய விரும்பினான், ஆயினும் மக்களுக்குப் பயந்திருந்தான். ஏனெனில் மக்கள் யோவானை இறைவாக்கினன் என்று எண்ணினார்கள்.
6ஏரோதின் பிறந்த நாள் அன்று, ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி, ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள். 7அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான். 8அவள் தனது தாயின் தூண்டுதலினால், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டாள். 9அரசன் மிகவும் துக்கமடைந்தான். ஆனாலும் தனது ஆணையின் பொருட்டும், தனது விருந்தினர்களின் பொருட்டும், அவள் கேட்டதைக் கொடுக்கும்படி அவன் உத்தரவிட்டான். 10அவ்வாறே அரசனின் உத்தரவை நிறைவேற்றி, யோவானை சிறையில் வைத்து சிரச்சேதம் செய்தார்கள். 11அவனுடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு, அந்தச் சிறு பெண்ணிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அவள் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள். 12யோவானின் சீடர்கள் வந்து, அவனது உடலை எடுத்து அடக்கம் பண்ணினார்கள். அதன்பின்பு அவர்கள், இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்
13இப்படி நடந்ததைக் கேள்விப்பட்டதும், இயேசு யாருக்கும் தெரியாமல் தனிமையான ஒரு இடத்திற்குப் படகில் ஏறிச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், பட்டணத்திலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். 14இயேசு கரையில் இறங்கியவுடன், அங்கே பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மீது இரக்கம் கொண்டு, அவர்களில் நோயுற்று இருந்தோரைக் குணமாக்கினார்.
15மாலை வேளையானபோது, சீடர்கள் அவரிடம் வந்து, “இது ஒரு ஒதுக்குப்புறமான இடம். நேரமாகிவிட்டதால், கூடியிருப்பவர்களை அனுப்பி விடும். அவர்கள் கிராமங்களுக்குப் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய உணவை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள்.
16அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார்.
17“இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள்.
18“அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். 19அதன்பின்பு, மக்களை புற்தரையில் உட்காரும்படி செய்து, அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைத் துண்டு துண்டுகளாக்கிச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள். 20அவர்கள் எல்லோரும் உணவு உண்டு திருப்தியடைந்தார்கள். அவர்கள் உண்ட பின்னர் மீதியான துண்டுகளை, சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். 21உணவு உண்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளும்கூட இருந்தார்கள்.
இயேசு தண்ணீர் மேல் நடந்தது
22பின்பு அவர் மக்கள் கூட்டத்தை அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடர்களை படகில் ஏறி மறுகரைக்குப் போகும்படி செய்தார். 23அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார். 24ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையைவிட்டு வெகு தூரம் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால், படகு அலைகளினால் அலைக்கழிக்கப்பட்டது.
25அதிகாலை மூன்று மணியளவில்#14:25 மூன்று மணியளவில் – கிரேக்க மொழியில் நான்காம் சாமம் என்றுள்ளது. அதாவது அதிகாலை மூன்று மணி முதல் ஆறு மணி வரை இயேசு கடலின் மேல் நடந்து அவர்களிடம் சென்றார். 26அவர் கடலின் மேல் நடந்து வருவதை சீடர்கள் கண்டபோது, அவர்கள் திகிலடைந்து, “பேய்!” என்று பயத்தில் அலறினார்கள்.
27உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார்.
28அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர் மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான்.
29அதற்கு அவர், “வா” என்றார்.
அப்போது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின் மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான். 30ஆனால் அவன் காற்றைக் கண்டபோது, பயமடைந்து அமிழத் தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான்.
31உடனே இயேசு தமது கையை நீட்டி, அவனைப் பிடித்து, “விசுவாசம் குறைந்தவனே! நீ ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார்.
32அவர்கள் படகில் ஏறியபோது காற்று தணிந்தது. 33படகில் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்” என்றார்கள்.
34அவர்கள் மறுகரைக்குப் போய், கெனேசரேத்து என்னும் இடத்தில் கரை இறங்கினார்கள். 35அந்த இடத்து மக்கள், இயேசுவை அடையாளம் கண்டுகொண்டதும், சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் செய்தி அனுப்பினார்கள். மக்களோ, தங்களில் நோயுற்றிருந்தவர்களையெல்லாம் அவரிடம் கொண்டுவந்தார்கள். 36நோயாளிகள் அவரது மேலாடையின் ஓரத்தையேனும் தொடுவதற்கு, அவர் அனுமதிக்க வேண்டுமென, அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.

Šiuo metu pasirinkta:

மத்தேயு 14: TRV

Paryškinti

Dalintis

Kopijuoti

None

Norite, kad paryškinimai būtų įrašyti visuose jūsų įrenginiuose? Prisijunkite arba registruokitės