Logo ya YouVersion
Elilingi ya Boluki

ஆதியாகமம் 13

13
ஆபிராம் கானானுக்குத் திரும்புதல்
1ஆபிராம் எகிப்தை விட்டு வெளியேறி, தன் மனைவியோடும் தனக்குரிய பொருட்களோடும் பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்தான். லோத்துவும் அவனோடு சென்றான். 2ஆபிராம் மிகவும் செல்வந்தனாக இருந்தான். அவனிடம் ஏராளமான மிருகங்களும் தங்கமும் வெள்ளியும் இருந்தன.
3ஆபிராம் தொடர்ந்து பயணம் செய்து பாலைவனத்தை விட்டு பெத்தேலுக்குச் சென்று, பெத்தேல் நகரத்திற்கும் ஆயி நகரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் தங்கினான். அது ஏற்கெனவே அவனும் அவன் குடும்பத்தாரும் தங்கிய இடமாகும். 4இங்கு தான் ஆபிராம் பலிபீடம் அமைத்திருந்தான். எனவே, ஆபிராம் கர்த்தரை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.
ஆபிராமும் லோத்தும் பிரிகிறார்கள்
5இந்த நேரத்தில் லோத்தும் ஆபிராமோடு பயணம் செய்துகொண்டிருந்தான். லோத்துக்கும் நிறைய மிருகங்களும் கூடாரங்களும் இருந்தன. 6ஆபிராமிடமும் லோத்திடமும் இருந்த மிருகங்கள் வாழ்கிற அளவிற்கு அந்த நிலம் அவ்வளவு போதுமானதாக இல்லை. 7அதோடு கானானியர்களும் பெரிசியரும் அவர்களுடன் அங்கு வாழ்ந்து வந்தனர். ஆபிராமின் மேய்ப்பர்களும் லோத்தின் மேய்ப்பர்களும் தங்களுக்குள் சண்டையிட்டனர்.
8எனவே, ஆபிராம் லோத்திடம், “நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண்டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இனி மேல் எந்த விரோதமும் வேண்டாம். நாம் சகோதரர்கள். 9நாம் பிரிந்து விடுவோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றான்.
10லோத்து யோர்தான் நதிக்கு அருகான சமவெளியைப் பார்வையிட்டான். அங்கு நீர் வளம் இருப்பதைக் கண்டான். (கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கு முன்பு சோவாருக்குப்போகும் வழிவரை அது கர்த்தரின் தோட்டம் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.) 11எனவே லோத்து யோர்தான் சமவெளியைத் தேர்ந்தெடுத்தான். இருவரும் பிரிந்தனர். லோத்து கிழக்கு நோக்கிப் பயணம் செய்தான். 12ஆபிராம் கானான் தேசத்தில் தங்கினான். லோத்து சமவெளிப்பகுதியின் நகரங்களில் தங்கினான். லோத்து மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து சோதோமில் கூடாரம் அடித்தான். 13சோதோம் ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துகொண்டிருந்தனர் என்பதை அறிந்திருந்தார்.
14லோத்து விலகிப்போனதும் கர்த்தர் ஆபிராமிடம், “உன்னைச் சுற்றிலும் வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் பார். 15இந்தப் பூமியை நான் உனக்கும் உன் சந்ததியினருக்கும் கொடுக்கிறேன். இது என்றென்றும் உங்களுக்குரியதாக இருக்கும். 16உன் ஜனங்களை உலகத்தில் உள்ள புழுதியின் அளவுக்குப் பெருகச் செய்வேன். எவராவது புழுதியை எண்ண முடியுமானால் அதுவே உங்கள் தொகையாக இருக்கும். 17எனவே நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அவ்வளவு தூரம் நட. நான் அவற்றை உனக்குத் தருவேன்” என்றார்.
18எனவே, ஆபிராம் தனது கூடாரத்தை எடுத்துக்கொண்டு பெரிய மரங்களிருக்கும் எபிரோனிலிலுள்ள மம்ரேயின் சமபூமிக்குச் சென்றான். இங்கு ஆபிராம் கர்த்தரைத் தொழுதுகொள்ள ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

Tya elembo

Kabola

Copy

None

Olingi kobomba makomi na yo wapi otye elembo na baapareyi na yo nyonso? Kota to mpe Komisa nkombo