ஆதியாகமம் 20

20
20 அதிகாரம்
1ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்,
2அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
3தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
4அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?
5இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
6அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.
7அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.
8அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.
9அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
10பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
11அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
12அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
13என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த்திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்.
14அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
15பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னான்.
16பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
17ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,
18ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

ハイライト

シェア

コピー

None

すべてのデバイスで、ハイライト箇所を保存したいですか? サインアップまたはサインインしてください。

ஆதியாகமம் 20のビデオ