ஆதியாகமம் 16

16
ஆகாரும் இஸ்மயேலும்
1ஆபிராமின் மனைவி சாராய் அவனுக்குப் பிள்ளைகளைப் பெறவில்லை. ஆனால் அவளுக்கு ஆகார் என்னும் பெயருடைய எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்; 2எனவே சாராய் ஆபிராமிடம், “யெகோவா என்னைப் பிள்ளை பெறாதபடி ஆக்கியிருக்கிறார். ஆகவே நீர் என் பணிப்பெண்ணுடன் உறவுகொள்ளும்; ஒருவேளை அவள் மூலமாயினும் நான் ஒரு குடும்பத்தை உருவாக்கக் கூடியதாய் இருக்கும்” என்றாள்.
ஆபிராம் சாராயின் சொல்லுக்கு இணங்கினான். 3எனவே ஆபிராம் கானானில் பத்து வருடங்கள் குடியிருந்தபின் அவன் மனைவி சாராய், தன் எகிப்திய பணிப்பெண்ணான ஆகாரைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள். 4ஆபிராம் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கர்ப்பவதியானாள்.
தான் கர்ப்பவதியானதை ஆகார் அறிந்தபோது, தன் எஜமாட்டியான சாராயை இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினாள். 5சாராய் அதைக்கண்டு ஆபிராமிடம், “நான் வேதனைப்படுவதற்கான அநியாயத்திற்குப் பொறுப்பு நீரே. என் பணிப்பெண்ணை நான் உமக்குக் கொடுத்தேன், இப்பொழுது அவள் தான் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்து, என்னை இகழ்ச்சி செய்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில், யெகோவாவே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள்.
6அதற்கு ஆபிராம், “உன் பணிப்பெண், உன் பொறுப்பில்தானே இருக்கிறாள், எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ, அதை அவளுக்குச் செய்” என்றான். அதன்பின் சாராய் ஆகாரைக் கொடுமைப்படுத்தினாள்; அதனால் ஆகார் அவளைவிட்டு ஓடிப்போனாள்.
7யெகோவாவின் தூதனானவர் வனாந்திரத்தில் சூருக்குப் போகும் வழியில் இருந்த நீரூற்றுக்கு அருகே ஆகாரைக் கண்டார். 8அவர் அவளிடம், “ஆகாரே, சாராயின் பணிப்பெண்ணே, நீ எங்கிருந்து வந்திருக்கிறாய், எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அவள், “என் எஜமாட்டியாகிய சாராயைவிட்டு நான் ஓடிப்போகிறேன்” என்றாள்.
9அப்பொழுது யெகோவாவின் தூதனானவர், “நீ உன் எஜமாட்டியிடம் திரும்பிப்போய், அவளுக்குக் கீழ்ப்படிந்திரு” என்றார். 10மேலும் யெகோவாவினுடைய தூதனானவர், “உன் சந்ததிகளை எண்ணமுடியாத அளவு பெருகப்பண்ணுவேன்” என்றார்.
11மறுபடியும் யெகோவாவின் தூதனானவர் அவளிடம் சொன்னது:
“நீ இப்பொழுது கர்ப்பவதியாயிருக்கிறாய்,
உனக்கு ஒரு மகன் பிறப்பான்.
நீ அவனுக்கு இஸ்மயேல்#16:11 இஸ்மயேல் என்பதற்கு யெகோவா கேட்கிறார் என்று அர்த்தம். என்று பெயரிட வேண்டும்.
ஏனெனில் யெகோவா உன் அழுகுரலைக் கேட்டிருக்கிறார்.
12அவன் காட்டுக் கழுதையைப் போல் வாழ்கிற மனிதனாயிருப்பான்;
அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும்
எல்லோருடைய கைகளும் அவனுக்கு விரோதமாக இருக்கும்;
அவன் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராக
வெளிப்படையான விரோதத்துடன் வாழ்வான்.”
13அப்பொழுது அவள், “என்னைக் காண்கிறவரை நானும் இங்கே கண்டேன்” என்று சொல்லி, தன்னுடன் பேசிய யெகோவாவுக்கு, “நீர் என்னைக் காண்கிற இறைவன்” என்று பெயரிட்டாள். 14அதனால் அக்கிணறு, பீர்லகாய்ரோயீ#16:14 பீர்லகாய்ரோயீ என்பதற்கு என்னைக் காண்கிற ஜீவனுள்ளவரின் கிணறு என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது; அது காதேசுக்கும், பாரேத்திற்கும் இடையே இன்னும் இருக்கிறது.
15ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டான். 16ஆகார் இஸ்மயேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதுடையவனாய் இருந்தான்.

Kiemelés

Megosztás

Másolás

None

Szeretnéd, hogy a kiemeléseid minden eszközödön megjelenjenek? Regisztrálj vagy jelentkezz be