ஆதியாகமம் 12

12
ஆபிராமின் அழைப்பு
1யெகோவா ஆபிராமிடம் சொன்னார்: “நீ உன் நாட்டையும், உன் உறவினரையும், உன் தகப்பன் குடும்பத்தாரையும் விட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ.
2“நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன்,
உன்னை ஆசீர்வதிப்பேன்;
உன் பெயரை மேன்மைப்படுத்துவேன்,
நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.
3உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன்,
உன்னை சபிக்கும் எவரையும் நான் சபிப்பேன்.
பூமியின் எல்லா மக்கள் கூட்டங்களும்
உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.”
4யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே, ஆபிராம் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனுடன் போனான். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்படும்போது, அவனுக்கு எழுபத்தைந்து வயதாயிருந்தது. 5ஆபிராம் தன் மனைவி சாராய், தன் சகோதரனின் மகன் லோத்து, ஆரான் நாட்டில் தாங்கள் சம்பாதித்தவைகள், தங்களுடன் இருந்த வேலைக்காரர்கள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு கானான் நாட்டிற்குப் போகப் புறப்பட்டு, அங்கு போய்ச்சேர்ந்தார்கள்.
6ஆபிராம் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்து, சீகேமில் உள்ள மோரேயின் கருவாலி மரத்தடிக்கு வந்துசேர்ந்தான். அப்பொழுது கானானியர் அங்கே வசித்தார்கள். 7யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து, “உன் சந்ததிக்கு நான் இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார். அதனால் ஆபிராம் அங்கே தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு, ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
8அவன் அங்கிருந்து பெத்தேலுக்குக் கிழக்கேயுள்ள மலைப்பக்கமாய்ப் போய், பெத்தேல் மேற்கிலும், ஆயி கிழக்கிலும் இருக்கத்தக்கதாக தன் கூடாரத்தை அமைத்தான். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான்.
9பின்பு ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, நெகேப் என்னும் தென்தேசத்தை நோக்கிச் சென்றான்.
எகிப்தில் ஆபிராம்
10அந்நாட்களில், அந்த நாட்டிலே பஞ்சம் ஏற்பட்டது; பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்தபடியால், ஆபிராம் சிலகாலம் எகிப்தில் குடியிருப்பதற்காகப் போனான். 11அவன் எகிப்தின் அருகே வந்தபோது, தன் மனைவி சாராயிடம், “நீ மிகவும் அழகிய பெண் என்பது எனக்குத் தெரியும். 12எகிப்தியர் உன்னைக் காணும்போது, ‘இவள் அவனுடைய மனைவி’ என்று சொல்லி, என்னைக் கொன்றுவிடுவார்கள் ஆனால் உன்னையோ உயிரோடு விட்டுவிடுவார்கள். 13அதனால் நீ, உன்னை என் சகோதரி என்று சொல், அப்பொழுது அவர்கள் உனக்காக என்னை நன்றாக நடத்துவார்கள்; நானும் உன் நிமித்தம் உயிர் தப்புவேன்” என்றான்.
14ஆபிராம் எகிப்திற்கு வந்தபோது, சாராய் மிகவும் அழகானவள் என்பதை எகிப்தியர் கண்டார்கள். 15பார்வோனின் அதிகாரிகள் அவளைக் கண்டதும், அவளுடைய அழகைப்பற்றிப் பார்வோனிடம் புகழ்ந்தார்கள்; அதனால் சாராய் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். 16பார்வோன் சாராயின் நிமித்தம் ஆபிராமை நன்றாக நடத்தினான்; ஆபிராம் செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண் பெண் கழுதைகளையும், ஒட்டகங்களையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் பெற்றுக்கொண்டான்.
17ஆனால் யெகோவா ஆபிராமின் மனைவி சாராயின் நிமித்தம், பார்வோனையும் அவனுடைய வீட்டாரையும் கொடிய வியாதியால் தாக்கினார். 18அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து, “நீ எனக்கு என்ன செய்துவிட்டாய்? இவள் உன் மனைவி என்று ஏன் எனக்குச் சொல்லவில்லை? 19‘இவள் என் சகோதரி’ என்று ஏன் எனக்குச் சொன்னாய்? அதனால் அல்லவா அவளை என் மனைவியாக்கிக் கொள்ளும்படி எடுத்தேன்? இதோ, உன் மனைவி; அவளைக் கூட்டிக்கொண்டு போய்விடு!” என்றான். 20பார்வோன் ஆபிராமைக் குறித்துத் தன் வேலைக்காரருக்கு கட்டளையிட்டான், அவர்கள் அவனை அவன் மனைவியுடனும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் அவனை நாட்டிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள்.

Kiemelés

Megosztás

Másolás

None

Szeretnéd, hogy a kiemeléseid minden eszközödön megjelenjenek? Regisztrálj vagy jelentkezz be