யோவான் 19
19
19 அதிகாரம்
1அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.
2போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
3யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
4பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.
5இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.
6பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.
7யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும் என்றார்கள்.
8பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,
9மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
10அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
11இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
12அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
13பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
14அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
15அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
16அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.
17அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
18அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
19பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
20இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.
21அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
22பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
23போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.
24அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.
25இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனாமரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்.
26அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
27பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
28அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
29காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
30இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
31அந்த நாள் பெரிய ஓய்வு நாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
32அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.
33அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
34ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
35அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
36அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
37அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
38இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.
39ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
40அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
41அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
42யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
Chwazi Kounye ya:
யோவான் 19: TAOVBSI
Pati Souliye
Pataje
Kopye

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.