அப்போஸ்தலர் 4
4
4 அதிகாரம்
1அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,
2அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு,
3அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.
4வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
5மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும்,
6பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி,
7அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
8அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே;
9பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால்,
10உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
11வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
12அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
13பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.
14சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.
15அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
16இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
17ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு,
18அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
19பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
20நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
21நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
22அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
23அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.
24அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.
25புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
27அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
28ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
29இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
30உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
31அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
32விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
34நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
35அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
36சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
37தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
Chwazi Kounye ya:
அப்போஸ்தலர் 4: TAOVBSI
Pati Souliye
Pataje
Kopye

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.