YouVersion Logo
Search Icon

மாற்கு 4

4
விதைக்கிறவனைப் பற்றிய உவமை
1மீண்டும் இயேசு கடற்கரையினில் போதிக்கத் தொடங்கினார். அவரிடத்தில் மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபடியால், இயேசு கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் ஏறி அதில் உட்கார்ந்தார்; மக்களோ கடற்கரை ஓரமாய் நின்றார்கள். 2இயேசு பல காரியங்களை, உவமைகள் மூலம் அவர்களுக்கு போதித்தார். அவர் தமது போதனையில் அவர்களுக்கு இதைச் சொன்னார்: 3“கேளுங்கள்! ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். 4அவன் விதைகளைத் விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. 5சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததினால், அது விரைவாக முளைத்தாலும். 6வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின. 7வேறுசில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன; முட்செடி வளர்ந்து, பயிர்களை நெருக்கிப் போட்டது. அதனால், அவைகள் விளைச்சலைக் கொடுக்கவில்லை. 8வேறுசில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன; அவை முளைவிட்டு வளர்ந்து முப்பதும், அறுபதும், நூறு மடங்கானதுமாக விளைச்சலைக் கொடுத்தன.”
9பின்பு இயேசு அவர்களுக்கு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
10அவர் தனிமையாய் இருந்தபோது, அந்த பன்னிரண்டு பேரும் அவருடன் இருந்த மற்றவர்களும் அந்த உவமையைப் பற்றிய விளக்கத்தைக் கேட்டார்கள். 11இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசின் இரகசியம் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது; ஆனால், வெளியில் இருக்கிறவர்களுக்கோ, எல்லா காரியங்களும் உவமைகள் மூலமாகவே சொல்லப்படுகின்றன. 12இதனால்,
“ ‘அவர்கள் எப்பொழுதும் கண்டும், ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும்,
கேட்டும் ஒருபோதும் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்;
இல்லாவிட்டால், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்’ ”#4:12 ஏசா. 6:9,10
என்றார்.
13மேலும் இயேசு அவர்களிடம், “இந்த உவமை உங்களுக்கு விளங்கவில்லையா? அப்படியானால், மற்ற உவமைகளையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வீர்கள்?” என்று கேட்டார். 14“விவசாயி வார்த்தையை விதைக்கிறான். 15சிலர் பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதை போன்றவர்கள். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன், சாத்தான் வந்து அவர்களில் விதைக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துப் போடுகிறான். 16மற்றவர்களோ, கற்பாறையான இடங்களில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள். 17ஆனால் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விசுவாசத்திலிருந்து விழுந்து போகிறார்கள். 18வேறுசிலரோ, முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டும், 19இவ்வாழ்விற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும், இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து, வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் வார்த்தை அவர்களில் பலனற்றுப் போகிறது. 20வேறுசிலரோ, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர்கள்; அவர்கள் வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு சிலர் முப்பதும், அறுபதும், நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுக்கிறார்கள்” என்றார்.
விளக்குத்தண்டின் மேல் விளக்கு
21மேலும் இயேசு அவர்களிடம், “ஒரு விளக்கைக் கொண்டுவருவது, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ மறைத்துவைக்கிறதற்கா? அதை விளக்குத்தண்டின் மேல் வைக்கிறதற்கு அல்லவா? 22வெளிப்படாமல் மறைத்திருப்பது ஒன்றுமில்லை, வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. 23கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
24இயேசு தொடர்ந்து: “நீங்கள் கேட்பதைக் கவனமாய் யோசியுங்கள். எந்த அளவையை நீங்கள் உபயோகிக்கிறீர்களோ, அந்த அளவையினாலேயே உங்களுக்கும் அளக்கப்படும். கேட்கிற உங்களுக்கு அதிகமாகவும் கொடுக்கப்படும். 25இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
வளரும் விதையின் உவமை
26மேலும் இயேசு சொன்னார்: “இறைவனுடைய அரசு ஒருவர் விதைகளை நிலத்தில் விதைக்கிறதற்கு ஒப்பாயிருக்கிறது. 27அவன் இரவும் பகலும் தூங்கியும் விழித்தும் இருக்கையில் அந்த விதை முளைவிட்டு வளர்கிறது; அது எப்படியென்று அவனுக்குத் தெரியாது. 28மண் தானாகவே தானியத்தை, முதலில் பயிரையும் பின்பு கதிரையும் அதற்குப் பின்பு கதிரிலே நிறைந்த தானியத்தையும் அது கொடுக்கிறது. 29பயிர் விளைந்தவுடனே, அறுவடை வந்துவிட்டதென்று விதைத்தவன் அதன்மேல் அரிவாளை போடுகிறான்” என்றார்.
கடுகு விதையின் உவமை
30மீண்டும் இயேசு, “இறைவனுடைய அரசை, நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விவரித்துக் கூறுவோம்? 31அது கடுகுவிதையைப் போன்றது. அது பூமியிலுள்ள எல்லா விதைகளிலும் சிறியதாக இருக்கிறது. 32ஆகிலும் அது விதைக்கப்படும்போது முளைத்து, தோட்டத்திலுள்ள மற்ற எல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்கிறது. ஆகாயத்துப் பறவைகள் அதன் நிழலில் வந்து தங்கக்கூடிய அளவுக்குப் பெரியதான கிளைகளையும் விடுகிறது” என்றார்.
33மக்கள் கேட்டு விளங்கக்கூடிய அளவுக்கு, இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலம், அவர்களுக்கு வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தார். 34உவமைகளின் மூலமே அல்லாமல், இயேசு அவர்களுடன் எதையுமே பேசவில்லை. ஆனால் அவர் தம்முடைய சீடர்களுடன் தனித்திருந்தபோது, அவர்களுக்கு எல்லாவற்றையும் தெளிவாக்கினார்.
இயேசு புயலை அடக்குதல்
35அன்று மாலை வேளையானபோது, இயேசு தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார். 36அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, இயேசுவை அவர் படகில் இருந்த வண்ணமாகவே, தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. 37அப்பொழுது பலத்த புயல்காற்று உண்டாகி, அலைகள் படகின்மேல் மோதின; படகு மூழ்கத்தொடங்கியது. 38இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் மூழ்கப்போவதைப் பற்றி, உமக்குக் கவலையில்லையா!” எனக் கேட்டார்கள்.
39இயேசு விழித்தெழுந்து, காற்றைக் கடிந்துகொண்டார்; அலைகளிடம், “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்பொழுது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று.
40இயேசு தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார்.
41அவர்கள் பயமடைந்து ஒருவரோடொருவர், “இவர் யார்? காற்றும், அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே?” என்று பேசிக்கொண்டார்கள்.

Currently Selected:

மாற்கு 4: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in