YouVersion Logo
Search Icon

மத்தேயு 25

25
பத்துக் கன்னிகைகளின் உவமை
1“அந்நாளிலே பரலோக அரசு, பத்து கன்னிகைகள் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும். 2அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாத கன்னிகைகளாகவும் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னிகைகளாகவும் இருந்தார்கள். 3அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. 4ஆனால் புத்தியுள்ள கன்னிகைகளோ தங்கள் விளக்குகளுடன் எண்ணெயையும் பாத்திரங்களில் எடுத்துச் சென்றார்கள். 5மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
6“நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார்! அவரை சந்திக்கப் புறப்படுங்கள் புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது.
7“அப்பொழுது எல்லா கன்னிகைகளும் விழித்தெழுந்து, அவரவருடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள். 8புத்தியில்லாத கன்னிகைகளோ புத்தியுள்ள கன்னிகைகளிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள்.
9“அதற்கு புத்தியுள்ள கன்னிகைகள், ‘இல்லை, எங்களிடம் இருக்கும் எண்ணெய் உங்களுக்கும் எங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.
10“புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்குவதற்காகப் போகும்போதே மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிகைகள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே சென்றார்கள். கதவோ அடைக்கப்பட்டது.
11“பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள்.
12“ஆனால் அவரோ, ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார்.
13“எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் மானிடமகனாகிய நான் திரும்பிவரும் நாளையும் வேளையையும் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார்.
பொற்காசுகளின் உவமை
14“மேலும், பரலோக அரசு பயணம் செல்கின்ற ஒருவன் தனது வேலைக்காரர்களை அழைத்துத் தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்ததுபோல் இருக்கும். 15ஒருவனுக்கு அவன் ஐந்து பொற்காசும், இன்னொருவனுக்கு இரண்டு பொற்காசும், வேறொருவனுக்கு ஒரு பொற்காசும்#25:15 ஒரு பொற்காசு என்பது மூல மொழியில் உவமை முழுவதிலும் தாலந்து என்றுள்ளது; ஒரு தாலந்து என்பது சுமார் 34 கிலோகிராம். கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான். 16ஐந்து பொற்காசைப் பெற்றவன் உடனேபோய், இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதிக்க அதை முதலீடு செய்தான். 17அவ்வாறே இரண்டு பொற்காசைப் பெற்றவன், இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்தான். 18ஆனால் ஒரு பொற்காசைப் பெற்றவனோ புறப்பட்டுப்போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் காசைப் புதைத்து வைத்தான்.
19“நீண்டகாலத்திற்குப்பின் அந்த வேலைக்காரர்களின் எஜமான் திரும்பிவந்து, அவர்களிடம் கணக்கு கொடுக்கும்படிக் கேட்டான். 20ஐந்து பொற்காசைப் பெற்றவன், இன்னும் ஐந்து பொற்காசைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
21“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
22“இரண்டு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
23“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே, நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
24“பின்பு ஒரு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமுள்ள மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும் அவ்விடத்தில் அறுவடை செய்கிறவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும் அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கிறவர் என்றும் அறிவேன். 25எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய் உமது ஒரு காசை நிலத்திலே புதைத்து வைத்தேன். பாரும் உமக்குரிய காசு’ என்றான்.
26“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘கொடியவனே, சோம்பேறியான வேலைக்காரனே, நான் ஒரு இடத்தில் விதைக்காமல் அங்கு அறுவடை செய்கிறவன் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாமல் அங்கு அள்ளிச் சேர்க்கிறவன் என்றும் நீ அறிந்திருந்தாயே. 27அப்படியானால், நீ என் காசை வங்கியில் போட்டு வைத்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வரும்போது, அதை வட்டியுடன் திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான்.
28“அவன், ‘அந்த ஒரு காசை அவனிடமிருந்து எடுத்து, அதைப் பத்து காசை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள். 29ஏனெனில் இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும், அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 30அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே தள்ளுங்கள். பற்கடிப்பும் அழுகையும் இருக்கும் இருளிலே தள்ளிப்போடுங்கள்’ என்றான்.
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்
31“மானிடமகனாகிய நான் எனது மகிமையில் வரும்போது, தூதர்கள் எல்லோரும் என்னுடன் வருவார்கள்; நான் பரலோக மகிமையுடன் எனது அரியணையில் அமர்ந்திருப்பேன். 32எல்லா ஜனத்தாரும் எனக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதுபோல், மக்களையும் நான் ஒருவரிலிருந்து ஒருவரை வேறு பிரிப்பேன். 33நான் செம்மறியாடுகளை எனது வலதுபக்கத்தில் நிறுத்துவேன், வெள்ளாடுகளை எனது இடதுபக்கத்தில் நிறுத்துவேன்.
34“அப்பொழுது நான் வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், அப்பொழுது எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்; 36நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்பொழுது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார்.
37“அப்பொழுது நீதிமான்கள் என்னிடம், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்? 38எப்பொழுது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடை இல்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்? 39எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள்.
40“அதற்கு நான், ‘உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளிப்பேன்.
41“பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’ ” என்று சொல்வேன். 42ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குக் குடிக்கக்கொடுக்கவில்லை; 43நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை, என்று சொல்வார்.
44“அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவும் தாகமுள்ளவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை அந்நியராகவும் உடையில்லாதவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருப்பவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.
45“அதற்கு நான் அவர்களுக்கு, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யவில்லை’ என்பேன்.
46“அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in