YouVersion Logo
Search Icon

மத்தேயு 12

12
ஓய்வுநாளின் ஆண்டவர்
1அக்காலத்தில் ஓய்வுநாளில், இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகச் சென்றார். அவருடைய சீடர்கள் பசியாயிருந்ததினால், அவர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். 2பரிசேயர்கள் இதைக் கண்டபோது, அவர்கள் இயேசுவிடம், “இதோ, உமது சீடர்கள் ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தைச் செய்கிறார்களே” என்றார்கள்.
3இயேசு அதற்குப் பதிலாக, “தாவீதும், அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? 4அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய், அவனும் அவனோடிருந்தவர்களும் மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தைச் சாப்பிட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்தது மோசேயின் சட்டத்திற்கு முரணாயிருந்தது. 5மேலும், ஆசாரியர்கள் ஓய்வுநாளில் ஆலயத்திலுள்ள தங்கள் வேலையினால் ஓய்வுநாளையே வேலை நாளாக்கினாலும் குற்றமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மோசேயின் சட்டத்தில் வாசிக்கவில்லையா? 6ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார். 7ஆனால், ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்#12:7 ஓசி. 6:6’ என்ற இறைவார்த்தையின் கருத்து உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திருக்கமாட்டீர்கள். 8ஏனெனில், மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.
9இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குள் சென்றார். 10அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும்படி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
11இயேசு அவர்களிடம், “உங்களில் யாரிடமாவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைப்பிடித்து வெளியே தூக்கியெடுக்கமாட்டீர்களா? 12ஆட்டைவிட ஒரு மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன்! ஆதலால் ஓய்வுநாளிலே மோசேயினுடைய சட்டத்தின்படி நன்மை செய்வது உகந்ததே” என்றார்.
13அதற்குப் பின்பு இயேசு, அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப்போல முற்றிலுமாக குணமடைந்தது. 14அப்பொழுது பரிசேயர் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி சதி செய்தார்கள்.
இறைவன் தெரிந்துகொண்ட ஊழியர்
15இதை அறிந்த இயேசுவோ, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அநேகர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களில் எல்லா நோயாளிகளையும் இயேசு குணப்படுத்தினார். 16அவர், தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என அவர்களை எச்சரித்தார். 17இறைவாக்கினன் ஏசாயா மூலமாகக் கூறப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி இது நடந்தது:
18“இவர் நான் தெரிந்துகொண்ட எனது ஊழியராயிருக்கிறார்;
நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே.
இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன்.
இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார்.
19இவர் வாக்குவாதம் செய்யமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்;
யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவுமாட்டார்கள்.
20நீதிக்கு வெற்றி கிடைக்கும்வரை,
அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்,
மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்.
21இவருடைய பெயரில் யூதரல்லாதவர்கள் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.”#12:21 ஏசா. 42:1‑4
இயேசுவும் பெயல்செபூலும்
22அப்பொழுது சிலர், பிசாசு பிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவன் பார்வையற்றவனும், ஊமையுமாய் இருந்தான். இயேசு அவனை குணமாக்கினார்; அவனால் பேசவும் பார்க்கவும் முடிந்தது. 23மக்கள் எல்லோரும் வியப்படைந்து, “இவர் தாவீதின் மகனாய் இருப்பாரோ?” என்றார்கள்.
24ஆனால் பரிசேயர் இதைக் கேட்டபோது, “இந்த ஆள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே பிசாசுகளை விரட்டுகிறான்” என்றார்கள்.
25இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம், “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுகிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே எதிராகப் பிளவுபடுகிற எந்த ஒரு பட்டணமும் குடும்பமும் நிலைக்காது. 26சாத்தானை சாத்தான் விரட்டினால், அவன் தனக்குத்தானே பிளவுபடுகிறவனாய் இருப்பான். அப்படியானால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? 27நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? எனவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள். 28ஆனால் நானோ, பிசாசுகளை இறைவனின் ஆவியானவரால் விரட்டுகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது.
29“மேலும் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், எப்படி ஒருவனால் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டுபோக முடியும்? அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும்.
30“என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். 31நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒவ்வொரு பாவமும், நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பது மன்னிக்கப்படாது. 32மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது.
33“ஒரு நல்ல மரத்தை நடுங்கள், அப்பொழுது அதன் கனிகளும் நல்லதாய் இருக்கும். ஒரு கெட்ட மரத்தை நீங்கள் நட்டால், அதன் கனிகளும் கெட்டதாய் இருக்கும். ஏனெனில் ஒரு மரம், அதன் கனிகளினாலேயே இனங்காணப்படுகிறது. 34விரியன் பாம்புக் குட்டிகளே! தீயவர்களாகிய நீங்கள் நன்மையானதை எப்படிப் பேசுவீர்கள்? ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். 35நல்ல மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் நன்மையிலிருந்து நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான். தீய மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் தீமையிலிருந்து தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். 36ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதர் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும். 37உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாய்த் தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள்.”
யோனாவின் அடையாளம்
38அப்பொழுது சில பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரிடம் வந்து, “போதகரே, நாங்கள் உம்மிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பார்க்க விரும்புகிறோம்” என்று கேட்டார்கள்.
39அதற்கு இயேசு, “பொல்லாத, வேசித்தனம் நிறைந்த இந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கிறார்கள். ஆனால், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 40யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மானிடமகனாகிய நானும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருக்கவேண்டும். 41நியாயத்தீர்ப்பின்போது, நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து நின்று, இவர்கள்மீது குற்றஞ் சுமத்துவார்கள்; ஏனெனில் அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். 42நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும் இந்தத் தலைமுறையினரோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.
43“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது. ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், 44‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும். அது அங்கு போகிறபோது, அந்த வீடு வெறுமையாயும், கூட்டிச் சுத்தமாக்கப்பட்டும், ஒழுங்காக இருப்பதைக் காணும். 45அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும். இவ்விதமாகவே, இந்த பொல்லாத தலைமுறையினருக்கும் நடக்கும்” என்றார்.
இயேசுவின் தாயும் சகோதரரும்
46இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். 47அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள்” என்றான்.
48இயேசு அவனிடம், “யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?” என்று கேட்டார். 49பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, “இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள். 50எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in