YouVersion Logo
Search Icon

மல்கியா 2

2
ஆசாரியருக்கு எச்சரிக்கை
1“ஆசாரியர்களே, இப்போதும் இந்த எச்சரிக்கை உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. 2நீங்கள் செவிகொடாமலும், என் பெயரைக் கனம்பண்ண உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமலும்விட்டால், உங்கள்மேல் ஒரு சாபத்தை அனுப்புவேன்; உங்கள் ஆசீர்வாதங்களையும் சபிப்பேன். ஆம், நீங்கள் என்னைக் கனம்பண்ணுவதற்கு உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமல் போனதால், நான் ஏற்கெனவே அவைகளை சபித்து விட்டேன்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
3“உங்கள் நிமித்தம் உங்கள் வழித்தோன்றல்களை நான் கடிந்துகொள்வேன்; நீங்கள் பண்டிகைக் காலங்களில் பலியிட்ட மிருகங்களின் கழிவுகளை உங்கள் முகங்களில் வீசுவேன். நீங்களும் அதனுடன் எறியப்படக் கொண்டுபோகப்படுவீர்கள். 4ஆசாரியர்களே நான் உங்களுக்கு ஒரு எச்சரிப்பை அனுப்புகிறேன். லேவியின் சந்ததியுடன் நான் செய்துகொண்ட உடன்படிக்கை மேலும் தொடரும்படி, இந்த எச்சரிக்கையை நான் அனுப்பினேன் என்பதை அப்பொழுது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். 5“நான் அவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கை வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கும் உடன்படிக்கை; அவற்றை நான் அவனுக்குக் கொடுத்தேன்; இதனால் நான் அவனிடம் பயபக்தியை எதிர்ப்பார்த்தேன். அவனும் என்னிடம் பயபக்தியாயிருந்து என் பெயரைக் குறித்த பயம் உடையவனாயிருந்தான். 6அவன் வாயில் உண்மையான அறிவுறுத்தல் இருந்தது. அவனுடைய உதடுகளில் பொய்யானதொன்றும் காணப்படவில்லை. அவன் என்னோடு சமாதானத்துடனும், நீதியுடனும் நடந்தான். அவன் அநேகரைப் பாவத்திலிருந்து திருப்பினான்.
7“ஆசாரியனின் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய வாயிலிருந்து மனிதர் அறிவுறுத்தலை நாடிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவனே சேனைகளின் யெகோவாவின் தூதுவனாயிருக்கிறான். 8ஆனால் நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை உங்கள் போதனைகளால் இடறிவிழப்பண்ணினீர்கள்; நான் லேவியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நீங்கள் மீறிவிட்டீர்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். 9“நீங்கள் என்னுடைய வழிகளைப் பின்பற்றாது, என் சட்டத்தின் விஷயங்களில் பாகுபாடு காட்டியதால், நான் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அவமானப்படுத்தி, இழிவுக்குள்ளாகும்படி செய்திருக்கிறேன்.”
உண்மையற்ற யூதா
10யூதா மக்களே! நம் எல்லோருக்கும் ஒரே தகப்பன் அல்லவா இருக்கிறார்? நம் எல்லோரையும் ஒரே இறைவன்தானே படைத்தார். அப்படியிருக்க நாம் ஒருவருக்கொருவர் உண்மையற்றவர்களாயிருந்து, நம் தந்தையர்களுடன் இறைவன் செய்துகொண்ட உடன்படிக்கையை ஏன் தூய்மைக்கேடாக்க வேண்டும்?
11யூதா நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. இஸ்ரயேலிலும், எருசலேமிலும் அருவருக்கத்தக்க செயல் செய்யப்பட்டிருக்கிறது: யூதா மனிதர் அந்நிய தெய்வங்களை ஆராதிக்கிற பெண்களைத் திருமணம் செய்ததினால், யெகோவா விரும்பும் பரிசுத்த ஆலயத்தை அசுத்தப்படுத்தியிருக்கிறார்கள். 12இதைச் செய்கிற மனிதனை குறித்தோ, அவன் யாராயிருந்தாலும் அவனை யெகோவா யாக்கோபின் கூடாரங்களில் வாழாதபடி முழுவதும் அகற்றிவிடட்டும்; அவன் சேனைகளின் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்துகிறவனாய் இருந்தாலும், அவனை அகற்றிவிடட்டும்.
13நீங்கள் இன்னொன்றைச் செய்கிறீர்கள்: யெகோவாவின் பலிபீடத்தை கண்ணீரினால் நிரப்புகிறீர்கள். யெகோவா உங்கள் காணிக்கைகளைக் கண்ணோக்கிப் பாராமல் இருப்பதாலும், அவற்றை உங்கள் கைகளிலிருந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளாததினாலும் அழுது புலம்புகிறீர்கள். 14நீங்களோ, “இது ஏன்?” என்றும் கேட்கிறீர்கள். ஏனென்றால் நீயோ உனது திருமண உடன்படிக்கையின் மனைவி உன் துணையாயிருந்தும், அவளுக்குத் துரோகம் செய்திருக்கிறாய்; இதனால் உனது வாலிப காலத்து மனைவிக்கும் உனக்கும் இடையே உடன்படிக்கையின் சாட்சியாய் இருந்த யெகோவா விளக்கம் கேட்கிறார்.
15உங்கள் இருவரையும் யெகோவா ஒருவராய் இணைக்கவில்லையா? நீங்கள் உடலிலும் ஆவியிலும் அவருடையவர்களே. ஏன் ஒருவராய் இணைத்தார்? அவர் தனக்கு இறை பக்தியுள்ள சந்ததியை பெறுவதற்காகவே இவ்வாறு செய்தார். எனவே நீங்கள் உங்கள் ஆவியிலே உங்களைக் காத்துக்கொண்டு, உங்கள் வாலிப வயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாதீர்கள்.
16நான் விவாகரத்தை வெறுக்கிறேன் என இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார். ஒரு மனிதன் உடையினால் தன்னை மூடி மறைப்பதுபோல், வன்முறையை மூடி மறைப்பதை நான் வெறுக்கிறேன் என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
எனவே நீங்கள் உங்களை ஆவியில் காத்துக்கொண்டு, நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருங்கள்.
நியாயத்தீர்ப்பு நாள்
17உங்கள் வார்த்தையினாலே யெகோவாவை சோர்வடையச் செய்தீர்கள்.
“எப்படி அவரை சோர்வடைய வைத்தோம்?” எனக் கேட்கிறீர்கள்.
தீமையானவற்றைச் செய்கிற எல்லோரையும் பார்த்து, யெகோவாவின் பார்வையில் நல்லவர்கள் என்றும், அவர்களிலே அவர் மகிழ்ச்சிகொள்கிறார் என்றும் சொல்கிறீர்கள். “நீதியை வழங்கும் இறைவன் எங்கே?” என்று கேட்கும்போதுமே அவ்வாறு செய்கிறீர்கள்.

Currently Selected:

மல்கியா 2: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in