Logo YouVersion
Eicon Chwilio

ஆதி 6

6
அத்தியாயம் 6
பூமியில் இராட்சதர்கள்
1மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது: 2தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். 3அப்பொழுது யெகோவா: “என் ஆவி #6:3 ஜீவனை கொடுக்கும் ஆவிஎன்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார். 4அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள். 5மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு, 6தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது. 7அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். 8நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது.
நோவாவின் வம்சவரலாறு
9நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான். 10நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான். 11பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. 12தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
நோவாவின் கப்பல்
13அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: ““மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன். 14நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு. 15நீ அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின் நீளம் 450 அடிகள், அதின் அகலம் 75 அடிகள், அதின் உயரம் 45 அடிகளாக இருக்கவேண்டும். 16நீ கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல் அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும், மூன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும். 17வானத்தின்கீழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான் பூமியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்; பூமியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும். 18ஆனாலும் உன்னோடு என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடுகூட உன்னுடைய மகன்களும், உன்னுடைய மனைவியும், உன்னுடைய மகன்களின் மனைவிகளும், கப்பலுக்குள் செல்லுங்கள். 19அனைத்துவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு, கப்பலுக்குள்ளே சேர்த்துக்கொள். 20வகைவகையான பறவைகளிலும், வகைவகையான மிருகங்களிலும், பூமியிலுள்ள அனைத்து வகைவகையான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உயிரோடு காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரவேண்டும். 21உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகப் பலவித உணவுப்பொருட்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்” என்றார். 22நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

Dewis Presennol:

ஆதி 6: IRVTam

Uwcholeuo

Rhanna

Copi

None

Eisiau i'th uchafbwyntiau gael eu cadw ar draws dy holl ddyfeisiau? Cofrestra neu mewngofnoda