யோவான் 2
2
கானாவூர் திருமணம்
1இவை நடந்து மூன்றாவது நாளிலே கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரிலே ஒரு திருமணம் நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கே இருந்தாள். 2இயேசுவும் அவருடைய சீடர்களுங்கூட அந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3திராட்சைரசம் தீர்ந்துபோனபோது, இயேசுவின் தாய் அவரிடத்தில், “திராட்சைரசம் தீர்ந்துவிட்டது” என்று சொன்னாள்.
4அப்பொழுது இயேசு, அம்மா, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? “என் நேரம் இன்னும் வரவில்லையா?” என்றார்.
5இயேசுவின் தாயோ வேலைக்காரரைப் பார்த்து, “அவர் உங்களுக்கு எதைச் சொல்கிறாரோ அதைச் செய்யுங்கள்” என்றாள்.
6அவ்விடத்தின் அருகில், தண்ணீர் வைக்கும் ஆறு கற்சாடிகள் இருந்தன. இவ்விதமான கற்சாடிகளையே யூதர்கள் சடங்காச்சாரச் சுத்திகரிப்புக்கு உபயோகித்தார்கள். ஒவ்வொரு கற்சாடியும் இருபதிலிருந்து முப்பது குடங்கள்வரைத் தண்ணீர் கொள்ளும்.
7இயேசு வேலைக்காரரிடம், “அந்தக் கற்சாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்றார்; அப்படியே அவர்கள் நிரம்பி வழியத்தக்கதாய் நிரப்பினார்கள்.
8அப்பொழுது இயேசு அவர்களிடம், “இதிலிருந்து மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடம் கொடுங்கள்” என்றார்.
அவர்கள் அப்படியே செய்தார்கள். 9பந்தி விசாரிப்புக்காரன், திராட்சை இரசமாய் மாறியிருந்த அந்தத் தண்ணீரை ருசித்துப் பார்த்தான். அது எங்கேயிருந்து வந்தது என்று அவனுக்குத் தெரியாதிருந்தது; ஆனால் தண்ணீரை நிரப்பிய வேலைக்காரருக்கே அது தெரிந்திருந்தது. அப்பொழுது பந்தி விசாரிப்புக்காரன் மணமகனை ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய், 10அவனிடம், “சிறந்த திராட்சை இரசத்தையே எல்லோரும் முதலில் கொடுப்பார்கள். விருந்தாளிகள் நிறைய குடித்த பின்பே தரம் குறைந்த இரசத்தைக் கொடுப்பார்கள். ஆனால் நீரோ சிறந்த இரசத்தை இவ்வளவு நேரமாய் வைத்திருந்திருக்கிறீரே” என்றான்.
11இதுவே இயேசு செய்த அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஆகும். அதை அவர் கலிலேயாவிலுள்ள கானாவிலே செய்தார். இவ்விதமாய் இயேசு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
12இதற்குப் பின்பு இயேசு தம்முடைய தாயோடும், சகோதரரோடும், தம்முடைய சீடரோடும் கப்பர்நகூமுக்குச் சென்றார். அங்கே அவர்கள் சிலநாட்கள் தங்கினார்கள்.
இயேசு ஆலயத்தைச் சுத்திகரித்தல்
13யூதருடைய பஸ்கா என்ற பண்டிகைக்கான காலம் நெருங்கி வந்தபோது, இயேசு எருசலேமுக்குச் சென்றார். 14ஆலய முற்றத்திலே ஆடுமாடுகளையும், புறாக்களையும் விற்கிறவர்களை அவர் கண்டார். இன்னும் சிலர் அங்கே உட்கார்ந்து மேஜைகளிலே நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார். 15எனவே இயேசு ஒரு கயிற்றைச் சவுக்கைப்போல் முறுக்கி எடுத்துக்கொண்டு, அவர்கள் எல்லோரையும் ஆலயப் பகுதியில் இருந்து துரத்தினார். ஆடுமாடுகளையும் துரத்தினார். நாணயம் மாற்றுவதில் ஈடுபட்டிருந்தவர்களின் நாணயங்களை எல்லாம் அவர் கொட்டிச் சிதறடித்து, அவர்களுடைய மேஜைகளைப் புரட்டித்தள்ளினார். 16இயேசு புறாக்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “இவைகளை இங்கிருந்து அகற்றிவிடுங்கள். என்னுடைய பிதாவின் வீட்டைச் சந்தையாக மாற்ற எப்படித் துணிந்தீர்கள்!” என்றார். 17அப்பொழுது இயேசுவினுடைய சீடர்களுக்கு, “உம்முடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் என்னைச் சுட்டெரித்தது”#2:17 சங். 69:9 என்று எழுதப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது.
18பின்பு யூதர்கள் அவரிடம், “இவைகளை எல்லாம் நீர் செய்கிறீரே, இதை எந்த அதிகாரத்தோடு செய்கிறீர் என்று நாங்கள் அறிவதற்கு, நீர் எங்களுக்கு என்ன அற்புத அடையாளத்தைச் செய்துகாட்டுவீர்?” என்று கேட்டார்கள்.
19இயேசு அவர்களுக்குப் பதிலாக, “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள். நான் அதைத் திரும்பவும் மூன்று நாளில் எழுப்புவேன்” என்றார்.
20அதற்கு யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு நாற்பத்தாறு வருடங்கள் எடுத்தன. நீர் இதை மூன்று நாட்களில் எழுப்புவீரோ?” என்றார்கள். 21ஆனால் இயேசு குறிப்பிட்டுச் சொன்னதோ தமது உடலாகிய ஆலயத்தையே. 22இயேசு இப்படிச் சொல்லியது அவர் மரித்தவர்களில் இருந்து உயிரோடு எழுந்தபின், சீடர்களுடைய நினைவுக்கு வந்தது, அவர்கள் வேதவசனத்தையும் இயேசு பேசிய வார்த்தைகளையும் விசுவாசித்தார்கள்.
23பஸ்கா என்ற பண்டிகையின்போது இயேசு எருசலேமில் இருக்கையில், அநேக மக்கள் அவரால் செய்யப்பட்ட அடையாளங்களைக் கண்டு, அவருடைய பெயரிலே விசுவாசம் வைத்தார்கள். 24ஆனால் இயேசுவோ எல்லா மனிதரையும் அறிந்திருந்தபடியால், அவர்களுக்கு இணங்கவில்லை. 25மனிதனைக் குறித்து இயேசுவுக்கு யாரும் சாட்சி சொல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் அவர் மனிதனின் உள்ளத்தை அறிந்திருந்தார்.
دیاریکراوەکانی ئێستا:
யோவான் 2: TCV
بەرچاوکردن
هاوبەشی بکە
لەبەرگرتنەوە
دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.