சகரியா 14
14
14 அதிகாரம்
1இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
2எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
3 கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.
4அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
5அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
6அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.
7ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
8அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிக்காலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.
9அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
10தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.
11அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்.
12எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
13அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.
14யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.
15அந்தப்பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும்.
16பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
17அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.
18மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும்வரும்.
19இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
20அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
21அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.
Currently Selected:
சகரியா 14: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.