ரூத் 4
4
4 அதிகாரம்
1போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
2அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.
3அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.
4ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனத்தில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
5அப்பொழுது போவாஸ்: நீரே நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.
6அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
7மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.
8அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.
9அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.
10இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.
11அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
12இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
13போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
14அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
15அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.
16நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
17அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
18பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
19எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
20அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
21சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
22ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
Currently Selected:
ரூத் 4: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.