YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தின விசேஷம் 7

7
7 அதிகாரம்
1இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
2ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
3நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
4முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.
5யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
6ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
7சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
8செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
9இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
10அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
11தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
12ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.
13அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
14அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
15ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
16இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை, இனித் தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
17சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in