YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தின விசேஷம் 1

1
1 அதிகாரம்
1சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.
2இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
3இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
4யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
5உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
6நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
7இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
8இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
9உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
10 கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
11அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
12அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
13அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
14அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது;
15அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
16தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
17நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
18மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
19நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;
20என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in