சங்கீதம் 68
68
68 சங்கீதம்
(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாட்டாகிய சங்கீதம்)
1தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்குமுன்பாக ஓடிப்போவார்கள்.
2புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோலத் துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
3நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
4தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
5தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
6தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
7தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில், (சேலா)
8பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.
9தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.
10உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.
11ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
12சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
13நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.
14சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.
15தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.
16உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.
17தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.
18தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.
19எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா)
20நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
21மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.
22உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்,
23என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவேன்; அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
24தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்.
25முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.
26இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
27அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
28உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்கள் நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும்.
29எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.
30நாணலிலுள்ள மிருகக்கூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.
31பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.
32பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். (சேலா)
33ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.
34தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.
35தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Currently Selected:
சங்கீதம் 68: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.