நெகேமியா 2
2
2 அதிகாரம்
1அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.
2அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
3ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.
4அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,
5ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.
6அப்பொழுது ராஜஸ்திரீயும், பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பி வருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.
7பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதா தேசத்துக்குப்போய்ச் சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,
8தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ளகரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
9அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார்.
10இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது.
11நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,
12நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகரசோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.
13நான் அன்று இராத்திரி பள்ளத்தாக்கின் வாசல் வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத்துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.
14அவ்விடத்தை விட்டு ஊருணிவாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
15அன்று இராத்திரியிலேயே நான் ஆற்றோரமாய்ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்.
16நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை.
17பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
18என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
19ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.
20அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர்விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.
Currently Selected:
நெகேமியா 2: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.