YouVersion Logo
Search Icon

லேவியராகமம் 21

21
21 அதிகாரம்
1பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தலாகாதென்று அவர்களோடே சொல்.
2தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும்,
3புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
4தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது.
5அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
6தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும்.
7அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.
8அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக.
9ஆசாரியனுடைய குமாரத்தி, வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.
10தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,
11பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,
12பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.
13கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.
14விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன்.
15அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
16பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
17நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.
18அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,
19காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,
20கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.
21ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.
22அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.
23ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
24மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for லேவியராகமம் 21