YouVersion Logo
Search Icon

லேவியராகமம் 19

19
19 அதிகாரம்
1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
3உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
4விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.
6நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைப் புசிக்கவேண்டும்; மூன்றாம் நாள்மட்டும் மீதியானது அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
7மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
8அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
9நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
10உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
11நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
12என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
13பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
14செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
15நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
16உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
17உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
18பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
19என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறு ஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.
20ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.
21அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
22அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
23நீங்கள் அந்த தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
24பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.
25ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
26யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
27உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
28செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
29தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.
30என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
31அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
32நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
33யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
34உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
35நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
36சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
37ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in