யோசுவா 18
18
18 அதிகாரம்
1இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.
2இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.
3ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள்.
4கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்திற்குத்தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
5அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
6நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
7லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.
8அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக் குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.
9அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.
10அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்கு தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
11பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பு புத்திரருக்கும் நடுவே இருந்தது.
12அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.
13அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத்அதாருக்குத் தாழ்வான பெத்தொரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.
14அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
15தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
16அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,
17வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,
18அராபாவுக்கு எதிரான வடபக்கமாய்ப் போய், அராபாவுக்கு இறங்கும்.
19அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடபக்கமாய்ப் போய், யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கான உப்புக்கடலின் வடமுனையிலே முடிந்துபோகும்; இது தென் எல்லை.
20கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம்.
21பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,
22பெத்அரபா, செமராயிம், பெத்தேல்,
23ஆவீம், பாரா. ஓப்ரா,
24கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
25கிபியோன், ராமா, பேரோத்,
26மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,
27ரெக்கேம், இர்பெயெல், தாராலா,
28சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.
Currently Selected:
யோசுவா 18: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.