எரேமியா 50
50
50 அதிகாரம்
1 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்துக்கும் விரோதமாக உரைத்த வசனம்:
2பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள்.
3அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும்.
4அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிறவழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.
6என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்.
7அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே, பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.
8பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்.
9இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை.
10கல்தேயா கொள்ளையாகும்: அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.
12உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
13 கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.
14நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது.
15அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
16விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ணுங்கள்; கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குத் திரும்பிக்கொண்டு, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.
17இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.
18ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அசீரியா ராஜாவைத் தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,
19இஸ்ரவேலை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும்.
20அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
22தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
23சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போயிற்று!
24பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.
25 கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டுவந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.
26கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
27அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
28நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.
29பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்கபலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்பு செய்தது.
30ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
31இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
32இடும்புள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் அக்கினியைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லாரையும் பட்சிக்கும்.
33சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.
34அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப்பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.
35பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
36பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
37பட்டயம் அதின் குதிரைகள்மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலஜாதியான ஜனங்கள் யாவர்மேலும் வரும், அவர்கள் பேடிகளாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.
38வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும், அவைகள் வறண்டுபோகும்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
39ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை.
40தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.
41இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
42அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
43அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.
44இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
45ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்.
46பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.
Currently Selected:
எரேமியா 50: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.