நியாயாதிபதிகள் 18
18
18 அதிகாரம்
1அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.
2ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைதேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.
3அவர்கள் மீகாவின் வீட்டண்டை இருக்கையில் லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்து வந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே இருக்கிறது என்ன என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
4அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; எனக்குச் சம்பளம் பொருந்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான்.
5அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.
6அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.
7அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு,
8சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.
9அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள்.
10நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.
11அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண்கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,
12யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே பாளயமிறங்கினார்கள்; ஆதலால் அது இந்நாள்வரைக்கும் மக்னிதான் என்னப்படும்; அது கீரியாத்யாரீமின் பின்னாலே இருக்கிறது.
13பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப் போய், மீகாவின் வீடு மட்டும் வந்தார்கள்.
14அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
15அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.
16ஆயுதபாணிகளாகிய தாண் புத்திரர் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள்.
17ஆசாரியனும் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்கையில், தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
18அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான்.
19அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
20அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்.
21அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், பண்டம்பாடிகளையும், தங்களுக்கு முன்னே போகும்படி செய்தார்கள்.
22அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,
23அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
24அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டு போகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
25தாண் புத்திரர் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்க கூக்குரல் இடாதே, இட்டால் கோபிகள் உங்கள் மேல் விழுவார்கள்; அப்பொழுது உன் ஜீவனுக்கும் உன் வீட்டாரின் ஜீவனுக்கும் மோசம் வருவித்துக்கொள்வாய் என்று சொல்லி,
26தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான்.
27அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.
28அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,
29பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர்கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
30அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.
31தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.
Currently Selected:
நியாயாதிபதிகள் 18: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.