YouVersion Logo
Search Icon

ஏசாயா 9

9
9 அதிகாரம்
1ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
2இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
3அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.
4மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.
5அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.
6நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
7தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
8ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினார்; அது இஸ்ரவேலின்மேல் இறங்கிற்று.
9செங்கல்கட்டு இடிந்துபோயிற்று, பொளிந்த கல்லாலே திரும்பக் கட்டுவோம்; காட்டத்திமரங்கள் வெட்டிப்போடப்பட்டது, அவைகளுக்குப் பதிலாகக் கேதுருமரங்களை வைப்போம் என்று,
10அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிகளுமாகிய எல்லா ஜனத்துக்கும் அது தெரியவரும்.
11ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்ற சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார்.
12முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கிறது.
13ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
14ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
15மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசியே வால்.
16இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.
17ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும், விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
18ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும்.
19சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான்.
20வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத்தின்பான்.
21மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் பட்சிப்பார்கள்; இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கைநீட்டினபடியே இருக்கிறது.

Currently Selected:

ஏசாயா 9: TAOVBSI

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in