ஏசாயா 60
60
60 அதிகாரம்
1எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
3உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.
4சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
5அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
6ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.
7கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.
8மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?
9தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கெனவே எனக்குக் காத்திருக்கும்.
10அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.
11உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
12உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்.
13என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின்மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்டுத்துவேன்.
14உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
15நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
16நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்.
17நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.
18இனிக்கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.
19இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
20உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்.
21உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங்குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.
22சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
Currently Selected:
ஏசாயா 60: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.