YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 23

23
23 அதிகாரம்
1சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.
2கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
3பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
4நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறை பூமியைத் தரவேண்டும் என்றான்.
5அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
6எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.
7அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,
8அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்,
9தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறை பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்.
10எப்பெரோன் ஏத்தின் புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
11அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான்.
12அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,
13தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம்பண்ணுவேன் என்றான்.
14அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
15என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம் பண்ணும் என்றான்.
16அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.
17இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும்,
18அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.
19அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எபிரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான்.
20இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறை பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in