2 சாமுவேல் 19
19
19 அதிகாரம்
1இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று.
3யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
4ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
5அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்திலே போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.
6அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
7இப்போதும் எழுந்திருந்து வெளியே வந்து, உம்முடைய ஊழியக்காரரோடே அன்பாய்ப் பேசும்; நீர் வெளியே வராதிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதில்லை என்று கர்த்தர்மேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நேரிட்ட எல்லாத் தீமையைப்பார்க்கிலும், அது உமக்கு அதிக தீமையாயிருக்கும் என்றான்.
8அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
9இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களிலுமுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கிவிட்டார், அவர்தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மைத் தப்புவித்தார்; இப்போதோ அப்சலோமுக்குத் தப்ப, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.
10நமக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணிவைத்த அப்சலோம் யுத்தத்திலே செத்தான்; இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக் கொண்டார்கள்.
11இப்படி இஸ்ரவேலர் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவனுக்குக் கேள்வியானபடியினால், தாவீது ராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?
12நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.
13நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான்.
14இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
15ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்மட்டும் வந்தபோது, யூதா கோத்திரத்தார் ராஜாவுக்கு எதிர்கொண்டுபோய், ராஜாவை யோர்தானைக் கடக்கப்பண்ண கில்கால் மட்டும் வந்தார்கள்.
16பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான்.
17அவனோடே பென்யமீன் மனுஷர் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவும், அவனோடேகூட அவனுடைய பதினைந்து குமாரரும், அவனுடைய இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாய்க் கடந்து போனார்கள்.
18அவர்கள் ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரையிலே வந்தது; அப்பொழுது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,
19ராஜாவை நோக்கி: என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக.
20உமது அடியானாகிய நான் பாவஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்.
21அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
22அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் சத்துருக்களாகிறதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,
23ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
24சவுலின் பேரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம் பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம் பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.
25அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்கொண்டு வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடு கூட வராமல் போனது என்ன என்று கேட்டான்.
26அதற்கு அவன்: ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
27அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.
28ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய, மற்றபடி அல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்,
29அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன் காரியத்தைக் குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
30அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
31கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான் மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்து வந்தான்.
32பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான்.
33ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான்.
34பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர. நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
35இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்வேண்டியது என்ன?
36அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
37நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
38அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
39ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
40ராஜா கடந்து, கில்கால்மட்டும் போனான்; கிம்காம் அவனோடேகூடக் கடந்துவந்தான்; யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி ஜனமும், ராஜாவை இக்கரைப்படுத்தி வந்தபின்பு,
41இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதா மனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்.
42அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள்.
43இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.
Currently Selected:
2 சாமுவேல் 19: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.