YouVersion Logo
Search Icon

2 இராஜாக்கள் 7

7
7 அதிகாரம்
1அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
2அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.
3குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?
4பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,
5சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.
6ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,
7இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன் மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.
8அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்த வெள்ளியையும், பொன்னையும், வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து,
9பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.
10அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்த பிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.
11அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள்.
12அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான்.
13அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.
14அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.
15அவர்கள் யோர்தான்மட்டும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்துபோட்ட வஸ்திரங்களாலும் தட்டுமுட்டுகளாலும் வழியெல்லம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.
16அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.
17ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே, அவன் செத்துப்போனான்.
18இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும், ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.
19அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.
20அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப்போனான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in