2 நாளாகமம் 29
29
29 அதிகாரம்
1எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அபியாள்.
2அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
3அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
4ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
5அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்: நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
6நம்முடைய பிதாக்கள் துரோகம்பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள்.
7அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
8ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்.
9இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.
10இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண என் மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.
11என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்து கொண்டார் என்றான்.
12அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும்,
13எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும்,
14ஏமானின் புத்திரரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் புத்திரரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர் எழும்பி,
15தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்.
16ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டு வந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டு போனார்கள்.
17முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.
18அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்திலே போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து,
19ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தம்பண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.
20அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.
21அப்பொழுது ராஜ்யபாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.
22அப்படியே ஆசாரியர் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்துப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்.
23பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
24இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள்.
25அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது.
26அப்படியே லேவியர் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.
27அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.
28கீதத்தைப்பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில், சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
29பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
30பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
31அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; ஆகையால் கிட்டவந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும், இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள்.
32சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின.
33அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டையாக்கப்பட்டது.
34ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம்பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்.
35சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்கதகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம் பண்ணப்பட்டது.
36தேவன் ஜனத்தை ஆயத்தப்படுத்தினதைக்குறித்து எசேக்கியாவும் ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்; இந்தக் காரியத்தைச் செய்யும்படியான யோசனை சடுதியாய் உண்டாயிற்று.
Currently Selected:
2 நாளாகமம் 29: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.