2 நாளாகமம் 18
18
18 அதிகாரம்
1யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,
2சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்.
3எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகிறீரா என்று கேட்டதற்கு அவன்: நான் தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்.
4பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
5அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
6பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.
7அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
8அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.
9இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
10கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
11சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போம், உமக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
12மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்.
13அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
14அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான்.
15ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வெறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.
16அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
17அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.
18அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
19அப்பொழுது கர்த்தர்: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
20அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார்.
21அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப் பண்ணுவாய்; போய் அப்படியே செய் என்றார்.
22ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
23அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.
24அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
25அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்,
26அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
27அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.
28பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
29இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி யுத்தத்திலே பிரவேசித்தான்.
30சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
31ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.
32இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.
33ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலேபட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.
34அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான்.
Currently Selected:
2 நாளாகமம் 18: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.