2 நாளாகமம் 13
13
13 அதிகாரம்
1ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
2மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.
3அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நாலுலட்சம்பேராகிய பராக்கிரம சேவகரின் இராணுவத்தாரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம்பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளை அவனுக்கு எதிராக யுத்தத்திற்கு நிறுத்தினான்.
4அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைதேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின்மேல் ஏறி நின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
5இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையாய்க் கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா?
6ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
7பேலியாளின் மக்களாகிய வீணர் அவனோடேகூடி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கக்கூடாமல் வாலவயதும் திடனற்ற மனதுமாயிருக்கையில், அவனுக்கு விரோதமாய்த் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.
8இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன் கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தேவர்களாக உண்டாக்கின பொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.
9நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும், லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.
10எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.
11அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும், மாலையிலும், பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.
12இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான்.
13யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப் பண்ணினான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது.
14யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.
15யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது. தேவன் யெரொபேயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார்.
16இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர்களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
17அபியாவும் அவனுடைய ஜனங்களும் அவர்களில் மகா சங்காரம்பண்ணினார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலில் வெட்டுண்டு விழுந்தார்கள்.
18அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டார்கள்.
19அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.
20அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ளமாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான்.
21அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்.
22அபியாவின் மற்ற கிரியைகளும், அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.
Currently Selected:
2 நாளாகமம் 13: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.