1 இராஜாக்கள் 8
8
8 அதிகாரம்
1அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.
2இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்துப் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கூடிவந்தார்கள்,
3இஸ்ரவேலின் மூப்பர் அனைவரும் வந்திருக்கையில், ஆசாரியர் கர்த்தருடைய பெட்டியை எடுத்து,
4பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியரும், லேவியரும், அவைகளைச் சுமந்தார்கள்.
5ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டார்கள்.
6அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் சந்நிதிஸ்தானமாகிய மகாபரிசுத்தஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்துவைத்தார்கள்.
7கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
8தண்டுகளின் முனைகள் சந்நிதிஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள் வரைக்கும் அங்கேதான் இருக்கிறது.
9இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
10அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
11மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
12அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
13தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
14ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்.
15அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
16அவர் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள ஒரு பட்டணத்தையும் தெரிந்துகொள்ளாமல் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிகாரியாயிருக்கும்படி தாவீதையே தெரிந்துகொண்டேன் என்றார்.
17இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
18ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்லகாரியந்தான்.
19ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.
20இப்போதும் கர்த்தர் சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்.
21 கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்.
22பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:
23இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர்.
24தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.
25இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.
26இஸ்ரவேலின் தேவனே, என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று விளங்குவதாக.
27தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
28என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.
29உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.
30உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ்செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.
31ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால்,
32அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாய் உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.
33உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்துக்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
34பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப்பண்ணுவீராக.
35அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,
36பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக.
37தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும்,
38உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,
39உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,
40தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.
41உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே.
42அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்,
43உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.
44நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம் பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்துக்கு நான் கட்டின இந்த ஆலயத்துக்கும் நேராக கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினால்,
45பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.
46பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டு போகும்போது,
47அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,
48தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது,
49உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து,
50உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக.
51அவர்கள் எகிப்தென்கிற இரும்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்தரமுமாய் இருக்கிறார்களே.
52அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக.
53 கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, உம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம்பண்ணினான்.
54சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து,
55நின்றுகொண்டு, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடே சொன்னது:
56தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை.
57நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து,
58நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும் கைக்கொள்ளுகிறதற்கும், நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாராக.
59 கர்த்தரே தேவன், வேறொருவரும் இல்லையென்பதைப் பூமியின் ஜனங்களெல்லாம் அறியும்படியாக,
60அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது ஜனமாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்துக்குத்தக்கதாய் விசாரிப்பதற்கு, நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணின இந்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக.
61ஆதலால் இந்நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றான்.
62பின்பு ராஜாவும் அவனோடே இருந்த இஸ்ரவேலர் அனைவரும், கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.
63சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
64 கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
65அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும், அதற்குப்பின்பு வேறே ஏழுநாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.
66எட்டாம் நாளிலே ஜனங்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
Currently Selected:
1 இராஜாக்கள் 8: TAOVBSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.