YouVersion Logo
Search Icon

ரோமர் 4

4
விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்
1யூதர்களான எமக்கு மனித அடிப்படையில் முற்பிதாவாக இருக்கும் ஆபிரகாம், இந்த விடயத்தில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டது என்ன? 2உண்மையிலேயே ஆபிரகாம் தமது செயல்களினால் நீதிமானாக்கப்பட்டிருந்தால் அவர் பெருமை பாராட்ட இடமுண்டு. ஆனால் இறைவனுக்கு முன்பாக அவர் பெருமை பாராட்ட இடமில்லை. 3அவரைப்பற்றி வேதவசனம் என்ன சொல்கின்றது? “ஆபிரகாம் இறைவனை நம்பி விசுவாசித்தார், அதைக்கொண்டு அவர் அவரை நீதிமானாகக் கணக்கிட்டார்”#4:3 ஆதி. 15:6; 22 என்கிறது.
4வேலை செய்கின்றவனுக்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளம் ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை. அது அவனுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய கொடுப்பனவு. 5ஆனால் ஒருவன் தன்னுடைய நல்ல செயல்களில் நம்பிக்கை வைக்காமல் அநியாயக்காரர்களை நீதிமானாக்கும் இறைவன் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது. 6நல்ல செயல்களினால் அல்லாமல் இறைவனால் நீதிமானாகக் கணக்கிடப்படுகின்ற மனிதனுடைய ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீதும் இவ்விதமாய் கூறுகிறார்:
7“மீறுதல்கள் மன்னிக்கப்பட்டு,
பாவங்கள் மூடப்பட்டவர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
8யாருடைய பாவத்தை கர்த்தர் கணக்கில் எண்ணாதிருக்கின்றாரோ,
அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”#4:8 சங். 32:1,2
9இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு மாத்திரமா? அல்லது விருத்தசேதனம் அற்றவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசமே அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கின்றோம்.#4:9 ஆதி. 15:6 10அது எப்போது அவருக்கு நீதியாக கணக்கிடப்பட்டது? அவர் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதற்குப் பின்னரா? அல்லது அதற்கு முன்னரா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்ட பின்பு அல்ல, அதற்கு முன்பே அது நடந்தது. 11ஆபிரகாம் விருத்தசேதனம் பெறாத நிலையில் இருந்தபோது விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் சான்றாக, பின்னரே விருத்தசேதனத்தை பெற்றுக்கொண்டார். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிகளான எல்லோருக்கும் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறார். இதனால், அவ்விதமாகவே அவர்களுடைய விசுவாசமானது அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது. 12அத்தோடு விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களில் ஒரு சாராருக்கும் அவர் தகப்பனாக இருக்கின்றார். இவர்கள் வெறுமனே விருத்தசேதனம் செய்தவர்களாய் மாத்திரம் இராமல், எமது தந்தையாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ள முன்னதாக நடந்த அதே விசுவாச அடிச் சுவட்டிலே நடப்பவர்களாயும் இருப்பவர்கள்.
13ஆபிரகாம் உலகத்தை உரிமைச் சொத்தாக பெறுவார் என்ற வாக்குறுதியை அவரும் அவரது சந்ததியும் நீதிச்சட்டத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ளவில்லை, விசுவாசத்தினால் வரும் நீதியின் மூலமாகவே பெற்றுக்கொண்டனர். 14ஏனெனில், நீதிச்சட்டத்தை பின்பற்றுபவர்களே சொத்துரிமை உடையவர்கள் எனின், விசுவாசம் அர்த்தமற்றதாகி, வாக்குறுதியும் பயனற்றதாகி விடும்; 15நீதிச்சட்டம் இறைவனின் கோபத்தைக் கொண்டுவருவதே இதன் காரணம். ஆனால் நீதிச்சட்டம் இல்லாதபோது அதை மீறுவதும் இருப்பதில்லை.
16ஆதலால் இறைவனின் வாக்குறுதி, விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு கிருபையில் தங்கியிருப்பதுடன், ஆபிரகாமின் வழிவந்த அனைவருக்கும் உரியது என்பதும் நிச்சயப்படுத்தப்பட்டது. அவ்விதமாக ஆபிரகாமின் வழிவந்தவர்கள் நீதிச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருந்தாலும், ஆபிரகாமின் விசுவாசத்தை உடையவர்களாக இருந்தாலும், எல்லோருமே வாக்குறுதிக்கு உரிமை பெற்றவர்கள். எனவே ஆபிரகாம் நம் எல்லோருக்கும் தந்தையாயிருக்கிறார். 17“அநேக இன மக்களுக்கு#4:17 அநேக இன மக்களுக்கு – கிரேக்க மொழியில், யூதரல்லாத மக்களுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்”#4:17 ஆதி. 17:5 என்று ஆபிரகாமைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கின்றவரும் இல்லாதவைகளை கட்டளையிட்டு உருவாக்குபவருமான இறைவனை விசுவாசித்த ஆபிரகாம், இறைவனின் பார்வையில் நம் அனைவருக்கும் தந்தையாய் இருக்கின்றார்.
18“உனது சந்ததி இவ்விதம் எண்ணிக்கைக்கு அடங்காமல் இருக்கும்”#4:18 எண்ணிக்கைக்கு அடங்காமல் இருக்கும் – கிரேக்க மொழியில், உனது சந்ததி இவ்விதம் இருக்கும் என்று அவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்கின்படியே, அநேக இனங்களுக்குத் தான் தந்தையாவேன் என்ற வாக்குறுதியில் நம்பிக்கை இழக்கக் கூடிய சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் ஆபிரகாம் விசுவாசித்தார். அதனால் அநேக இனங்களுக்குத் தந்தையானார்.#4:18 ஆதி. 15:5 19அவர் ஏறத்தாழ நூறு வயதுள்ளவராக இருந்தபோது தனது உடல் தளர்ந்து பிள்ளை பெறும் சக்தி அற்றதாகிவிட்டது#4:19 சக்தி அற்றதாகிவிட்டது – கிரேக்க மொழியில் உயிரற்றது போல் ஆகிவிட்டது என்றும், சாராளின் கருவறை கருத்தரிக்கும் சக்தியை இழந்துவிட்டது#4:19 சக்தியை இழந்துவிட்டது – கிரேக்க மொழியில் உயிரற்ற நிலையை அடைந்துவிட்டது என்றும் அவர் உணர்ந்தபோதும், அவர் விசுவாசத்தில் தளரவில்லை. 20இறைவனுடைய வாக்குறுதியைக் குறித்து அவிசுவாசத்தினால் அவர் தடுமாற்றமடையாமல், தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தி, 21தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவர் முழு நிச்சயமாய் நம்பினார். 22இதனால்தான், “அவருடைய விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.” 23இந்த, “அவருக்கு கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் அவருக்காக மாத்திரம் அல்ல, 24நமக்கும் சேர்த்தே அவை எழுதப்பட்டுள்ளன; நம்முடைய ஆண்டவர் இயேசுவை மரணித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன் மேல் விசுவாசம் வைக்கின்றவர்களாகிய நமக்கும், நமது விசுவாசமானது நீதியாகக் கணக்கிடப்படும் என்பதால், நமக்கும் சேர்த்தே எழுதப்பட்டுள்ளன. 25எமது ஆண்டவர் இயேசு, அவரே எமது பாவங்களுக்காக மரணதண்டனை அடையும்படி கையளிக்கப்பட்டவர். நாம் நீதிமான்கள் ஆக்கப்படுவதற்காக உயிரோடு எழுப்பப்பட்டவரும் அவரே.

Currently Selected:

ரோமர் 4: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in