ரோமர் 12
12
உயிருள்ள பலிகள்
1ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, நான் இறைவனுடைய இரக்கத்தைக்கொண்டு, உங்களை கேட்டுக்கொள்கின்றதாவது, உங்கள் உடல்களை பரிசுத்தமும், இறைவனுக்குப் பிரியமான உயிருள்ள பலியாகவும் ஒப்புக்கொடுங்கள். இதுவே உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய வழிபாடு. 2இந்த உலகத்தின் நடைமுறைகளுக்கு ஒத்து நடவாமல், சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகின்றதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் பகுத்தறியும்படி, உங்கள் மனம் புதுப்பிக்கப்படுவதால் முழுமையாக உருமாற்றம் அடையுங்கள்.
கிறிஸ்துவின் உடலில் தாழ்மையான சேவை
3இறைவன் எனக்களித்த கிருபையின்படி உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்கின்றதாவது: அளவுக்கதிகமாய் உங்களைக் குறித்து உயர்வாய் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறைவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின் அளவின்படியே, மனத்தெளிவுடன் உங்களைக் குறித்து மதிப்பீடு செய்துகொள்ளுங்கள். 4நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கின்றது, அதில் பல அங்கங்கள் இருக்கின்றன. இந்த அங்கங்கள் எல்லாம் ஒரே வேலையைச் செய்வதில்லை. 5அதுபோலவே கிறிஸ்துவுக்குள் நாம் பலராய் இருந்தாலும், ஒரே உடலாகின்றோம். நாம் உடலின் பல்வேறு அங்கங்களாக இருந்து, ஒருவருக்கு ஒருவர் சொந்தமாயிருக்கிறோம். 6நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின்படியே நாம் வித்தியாசமான வரங்களைப் பெற்றவர்களாய் இருக்கின்றபடியால், இறைவாக்கு உரைப்பதற்கு ஒருவன் வரம் பெற்றிருந்தால், அவன் தன்னுடைய விசுவாசத்தின் அளவுக்கு ஏற்றபடியே அதைப் பயன்படுத்தட்டும். 7அப்படியே சேவை செய்கின்றவன் சேவை செய்வதிலும், போதிக்கின்றவன் போதிப்பதிலும், 8உற்சாகப்படுத்துகின்றவன் உற்சாகப்படுத்துவதிலும் நிலைத்திருக்கட்டும்; மற்றவர்களுடைய தேவைகளுக்குக் கொடுத்து உதவுகின்றவன் தாராளமாய் கொடுக்கட்டும்; தலைமைத்துவத்தில் இருப்பவன் ஆர்வத்துடன் நிர்வாகத்தைச் செய்யட்டும்; இரக்கம் காண்பிப்பவன் அதை முகமலர்ச்சியுடன் செய்யட்டும்.
அன்பு
9உங்கள் அன்பு உண்மையானதாய் இருக்க வேண்டும். தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள். 10ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள். ஒவ்வொருவரும் உங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாகக் கனம் பண்ணி நடவுங்கள். 11ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். 12எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியாய் இருங்கள், துன்பங்களில் பொறுமையாய் இருங்கள், மன்றாடுவதில் உறுதியாய்த் தரித்திருங்கள். 13தேவையிலிருக்கின்ற இறைவனுடைய மக்களுடன் உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உபசரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
14உங்களைத் துன்புறுத்துகின்றவர்களை ஆசீர்வதியுங்கள். அவர்களைச் சபியாதிருங்கள். 15மகிழ்ச்சியாய் இருக்கின்றவர்களுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; அழுகின்றவர்களுடனே அழுங்கள். 16ஒருவரோடு ஒருவர் ஒரே மனதுள்ளவர்களாய் வாழுங்கள். பெருமைகொள்ளாமல், தாழ்ந்தவர்களுடனும் நட்புறவு கொள்ளுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனப் பெருமிதம் கொள்ளாதிருங்கள்.
17யாராவது உங்களுக்குத் தீமை செய்தால், அதற்குப் பதிலாக, நீங்களும் தீமை செய்ய வேண்டாம். எல்லா மனிதருடைய பார்வையிலும் சரியானதையே செய்யும்படி கவனமாயிருங்கள். 18இயலுமானால் உங்களால் முடிந்தவரை எல்லோருடனும் சமாதானமாய் இருங்கள். 19என் அன்பானவர்களே, பழிக்குப் பழிவாங்காமல் இறைவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடங்கொடுங்கள். ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதில் செய்வேன் என்று கர்த்தர் சொல்கின்றார்”#12:19 உபா. 32:35 என்று எழுதியிருக்கின்றதே. 20எனவே,
“உங்கள் பகைவன் பசியாயிருந்தால், அவனுக்கு உணவு கொடுங்கள்;
தாகமாயிருந்தால், அவனுக்கு அருந்தக் கொடுங்கள்.
இவ்விதம் செய்வதனால் நீங்கள் அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பீர்கள்.”#12:20 நீதி. 25:21,22
21தீமை உங்களை ஆக்கிரமிக்க இடங்கொடாமல் தீமையை நன்மையினால் ஆக்கிரமியுங்கள்.
Currently Selected:
ரோமர் 12: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.