YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 19

19
பரலோகத்தில் மகிழ்ச்சியின் துதி!
1இதற்குப் பின்பு, நான் பரலோகத்தில் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பெரும் மக்கள் கூட்டத்தினரின் இரைச்சலைப் போல் இருந்தது:
“அல்லேலூயா!
இரட்சிப்பும், மகிமையும், வல்லமையும் நம்முடைய இறைவனுக்கே உரியவை.
2ஏனெனில் அவருடைய நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை.
தனது பாலியல் ஒழுக்கக்கேட்டினால் பூமியைச் சீர்கெடுத்துவிட்ட அந்த மாபெரும் விலைமாதுக்கு,
இறைவன் தண்டனைத்தீர்ப்பு வழங்கிவிட்டார்.
தனது ஊழியரின் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக, அவர் அவளைப் பழிவாங்கியிருக்கிறார்.”
3அவர்கள் மீண்டும் சத்தமிட்டு,
“அல்லேலூயா!
அவள் எரிக்கப்பட்டு அதனால் எழுகின்ற புகை, என்றென்றுமாய் மேல் நோக்கி எழுகிறது”
என்றார்கள்.
4அந்த இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு உயிரினங்களும் கீழே விழுந்து, அரியணையில் அமர்ந்திருந்த இறைவனை வழிபட்டார்கள். அவர்கள் சத்தமிட்டு,
“ஆமென் அல்லேலூயா!”
என்றார்கள்.
5அப்போது அரியணையில் இருந்த ஒரு குரல்,
“இறைவனுடைய சகல ஊழியர்களே,
அவருக்குப் பயப்படுகிறவர்களே,
சிறியோர், பெரியோர்! நீங்கள் யாவரும் நம்முடைய இறைவனைத் துதியுங்கள்!”
என்றது.
6அதன்பின்பு, பெரும் மக்கள் கூட்டத்தினரின் இரைச்சலைப் போன்றதும், பாய்ந்து செல்லும் வெள்ளத்தின் இரைச்சலைப் போன்றதும், இடிமுழக்கத்தின் பெரும் ஓசையைப் போன்றதுமான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது உரத்த சத்தமிட்டு:
“அல்லேலூயா!
எல்லாம் வல்ல இறைவனாகிய நமது கர்த்தர் ஆளுகை செய்கின்றார்.
7நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருப்போம்.
அவருக்கே மகிமையைச் செலுத்துவோம்.
ஏனெனில், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது.
அவரது மணமகள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.
8அவள் அணிந்துகொள்ளும்படி, பளபளப்பானதும்
தூய்மையானதுமான மென்பட்டாடை அவளுக்குக் கொடுக்கப்பட்டது”
என்று சொன்னது. அந்த மென்பட்டானது பரிசுத்தவான்களின் நீதிச் செயல்களைக் குறிக்கின்றது.
9அப்போது அந்த இறைதூதன் என்னிடம், “ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எழுது!” என்றான். மேலும் அவன், “இது இறைவனின் சத்திய வார்த்தைகள்” என்றும் சொன்னான்.
10அப்போது, அவனை வணங்குவதற்காக நான் அவனுடைய பாதத்தில் விழுந்தேன். ஆனால் அவனோ என்னிடம், “நீ இப்படிச் செய்யாதே! இயேசுவுக்கு நற்சாட்சியாய் விளங்குகிற உன்னையும் உன் சகோதரர்களையும் போல, நானும் உங்களோடுகூட ஒரு சக ஊழியக்காரனாகவே இருக்கின்றேன். ஆகையால், இறைவனையே ஆராதனை செய்வாயாக. ஏனெனில் இயேசுவுக்கு சாட்சி கொடுப்பதே இறைவாக்கின் உள்ளார்ந்த எண்ணமாக#19:10 உள்ளார்ந்த எண்ணமாக – கிரேக்க மொழியில் ஆவி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருக்கின்றது” என்றான்.
வெள்ளைக் குதிரையில் பரலோக வெற்றி வீரர்
11பின்பு நான் பரலோகம் திறந்திருப்பதைக் கண்டேன். எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை இருந்தது. அதன்மீது ஏறியிருந்தவர் உண்மையுள்ளவர் என்றும், உண்மையானவர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் நீதியுடன் நியாயம் தீர்த்து யுத்தம் செய்கின்றார். 12அவருடைய கண்கள், தீச்சுவாலை போல் இருந்தன. அவருடைய தலையில் பல கிரீடங்கள் இருந்தன. அவரைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாத ஒரு பெயர் அவர்மீது எழுதப்பட்டிருந்தது. 13இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஒரு அங்கியை அவர் அணிந்திருந்தார். “இறைவனுடைய வார்த்தை” என்பதே அவருடைய பெயர். 14பரலோகத்தின் படையணியினர் வெள்ளைக் குதிரைகளில் ஏறி அவருக்குப் பின்னால் சென்றனர். அவர்கள் வெண்மையும் தூய்மையுமான மென்பட்டாடை அணிந்திருந்தார்கள். 15அவருடைய வாயிலிருந்து மக்கள் இனங்களை வெட்டி வீழ்த்துவதற்கென கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டது. “அவர் அவர்களை ஒரு இரும்புச் செங்கோலினால் ஆளுகை செய்வார்.”#19:15 சங். 2:9 அவர் எல்லாம் வல்ல இறைவனின் கோபம் என்னும் திராட்சை ஆலையை மிதிக்கிறார். 16அவருடைய அங்கியிலும் அவருடைய தொடையிலும் எழுதப்பட்டிருந்த பெயர் இதுவே:
அரசர்களுக்கெல்லாம் அரசர், ஆளுகின்றவர்களுக்கெல்லாம் ஆண்டவர்.
17அப்போது ஒரு இறைதூதன் சூரியனிலே நிற்பதைக் கண்டேன். அவன் நடுவானத்தில் பறக்கின்ற பறவைகளையெல்லாம் பார்த்து உரத்த குரலில், “வாருங்கள், இறைவனின் மகா விருந்திற்கு ஒன்றுகூடுங்கள். 18அப்போது அரசர்களினதும் படைத் தலைவர்களினதும் வலிமையான மனிதர்களினதும் குதிரைகளினதும் குதிரை வீரர்களினதும் சதையையும், சுதந்திரக் குடிமக்கள், அடிமைகள், பெரியவர், சிறியவர் ஆகிய எல்லா மக்களுடைய சதையையும் சாப்பிடுவீர்கள்” என்றான்.
19அதன்பின்பு குதிரையில் ஏறியிருந்தவரையும் அவருடைய படையையும் எதிர்த்து யுத்தம் செய்யும்படியாக அந்த மிருகமும் பூமியின் அரசர்களும் அவர்களின் இராணுவங்களும் ஒன்றுகூடி இருப்பதைக் கண்டேன். 20ஆனால் அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக அற்புத அடையாளங்களைச் செய்த போலி இறைவாக்கினனும் பிடிக்கப்பட்டான். இவனே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டவர்களையும் அதன் உருவச் சிலையை வணங்கியவர்களையும் தனது அற்புத அடையாளங்களினாலேயே ஏமாற்றியவன். பிடிபட்ட அவர்கள் இருவரும் கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரிக்குள் உயிருடன் வீசப்பட்டார்கள். 21எஞ்சியிருந்த மற்றவர்களோ, குதிரையில் அமர்ந்திருந்தவருடைய வாயிலிருந்து வெளிவந்த வாளினால் கொல்லப்பட்டார்கள். எல்லாப் பறவைகளும் அவர்களுடைய சதையை உட்கொண்டு திருப்தியடைந்தன.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in