YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 17

17
மாபெரும் விலைமாது
1ஏழு கிண்ணங்களை வைத்திருந்த, அந்த ஏழு இறைதூதரில் ஒருவன் என்னிடம் வந்து, “வா, அநேக நீர்நிலைகளின் மேல் உட்கார்ந்திருக்கிற மாபெரும் விலைமாதுக்கு கிடைக்கப் போகும் தண்டனையை நான் உனக்குக் காண்பிக்கிறேன். 2பூமியின் அரசர்கள் அவளுடன் தகாத உறவு கொண்டார்கள். அவளுடைய பாலியல் ஒழுக்கக்கேட்டின் திராட்சை மதுவினால் பூமியில் குடியிருக்கின்றவர்கள் போதையுற்றிருந்தார்கள்” என்றான்.
3பின்பு தூதன் என்னை ஆவியானவரால் பாலைநிலத்துக்குக் கொண்டு சென்றான். அங்கே ஒரு பெண் சிவப்பு நிறமுள்ள ஒரு மிருகத்தின் மேல் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அந்த மிருகம் இறைவனை அவமதிக்கும் பெயர்களால் மூடப்பட்டிருந்தது. அதற்கு ஏழு தலைகளும், பத்து கொம்புகளும் இருந்தன. 4அந்தப் பெண் ஊதா நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் ஆடை அணிந்தவளாய், தங்கத்தினாலும் மாணிக்கக் கற்களினாலும் முத்துக்களினாலும் அலங்கரிக்கப்பட்டவளாய் இருந்தாள். அருவருப்பான காரியங்களினாலும், தன்னுடைய முறைகேடான பாலுறவின் அசுத்தத்தினாலும் நிறைந்திருந்த ஒரு தங்கக் கிண்ணத்தை அவள் தன் கையில் வைத்திருந்தாள். 5அவளுடைய நெற்றியிலே மறைபொருளான ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது:
மாபெரும் பாபிலோன்,
விலைமாதுக்களுக்கும்,
பூமியின் எல்லா அருவருப்புகளுக்கும் தாய்.
6அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தை, அதாவது இயேசுவுக்கு சாட்சிகளாய் இருந்தவர்களின் இரத்தத்தை அருந்தி மதுவெறி கொண்டிருந்ததை நான் கண்டேன்.
அவளைக் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன். 7அப்போது அந்த இறைதூதன் என்னிடம், “நீ ஏன் வியப்படைகிறாய்? அந்தப் பெண்ணையும், அவளை சுமந்து செல்கின்ற ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் கொண்ட மிருகத்தையும் பற்றிய மறைபொருளை நான் உனக்கு விளக்கிச் சொல்கின்றேன். 8நீ கண்ட அந்த மிருகம், முன்பு ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுதோ இல்லை. ஆனால் அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து தன் அழிவுக்குச் செல்லும். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்களாய் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் அதைக் காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில் முன்னொரு காலத்தில் இருந்த அந்த மிருகம் இப்போது இல்லை, ஆனால் இனி அது வரப் போகின்றது.
9“இதை விளங்கிக்கொள்ள ஞானமுள்ள மனம் தேவை. அந்த ஏழு தலைகள், அந்தப் பெண் உட்கார்ந்திருக்கின்ற ஏழு மலைகளைக் குறிக்கின்றன. 10அவை ஏழு அரசர்களாம். அவர்களில் ஐந்து பேர் வீழ்ச்சியடைந்தார்கள். ஒருவன் இப்போது இருக்கின்றான். மற்றவனோ இன்னும் வரவில்லை. ஆனால் அவனது அரசு சிறிது காலம் மட்டுமே நிலைத்திருக்கும். 11முன்பு இருந்ததும், இப்போது இல்லாதிருக்கின்றதுமான அந்த மிருகமே எட்டாவது அரசன். அவன் அந்த ஏழு அரசர்களைச் சேர்ந்தவனாகவும், தனது அழிவை அடையப் போகின்றவனுமாய் இருக்கின்றான்.
12“நீ கண்ட பத்துக் கொம்புகள், அரசை இன்னமும் பெற்றுக்கொள்ளாத பத்து அரசர்கள். ஆனால் அவர்கள் அந்த மிருகத்துடனே சேர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு அரசர்களாக அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வார்கள். 13அவர்கள் ஒரே நோக்குடையவர்களாயிருந்து, தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்திற்குக் கொடுப்பார்கள். 14அவர்கள் ஆட்டுக்குட்டியானவருக்கு எதிராக யுத்தம் செய்வார்கள். ஆனால் அவர் ஆளுகின்றவர்களுக்கெல்லாம் ஆண்டவரும், அரசர்களுக்கெல்லாம் அரசருமாய் இருப்பதால் அவர்களை அவர் வெற்றிகொள்வார். அவரைப் பின்பற்றுகின்றவர்களும் வெற்றிகொள்வார்கள். இவர்களே இறைவனால் அழைக்கப்பட்டவர்கள், தெரிவு செய்யப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள்” என்றான்.
15மறுபடியும் அந்த இறைதூதன் என்னிடம், “அந்த விலைமாது உட்கார்ந்திருந்த இடத்தில் நீ கண்ட அந்த தண்ணீரானது, மக்களையும் மக்கள் கூட்டத்தினரையும் இனங்களையும் பல மொழிகளைப் பேசுகின்றவர்களையும் குறிக்கின்றது. 16நீ கண்ட மிருகமும் அந்த பத்துக் கொம்புகளும், அந்த விலைமாதின் மீது வெறுப்படையும். அவை அவளை அழித்து நிர்வாணமாக்கும். அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரித்து விடும். 17ஏனெனில் இறைவன் தமது நோக்கத்தை நிறைவேற்றும்படியாக இந்த எண்ணத்தை அவர்களுடைய இருதயங்களில் வைத்தார். அதன்படி, இறைவனுடைய வார்த்தைகள் நிறைவேறும் வரை அவர்கள் எல்லோரும் தங்களது ஆட்சி செய்யும் வல்லமையை அந்த மிருகத்திடம் கையளிப்பதற்கு உடன்பட வைத்தார். 18நீ கண்ட அந்தப் பெண் பூமியின் அரசர்கள் மேல் ஆட்சி செலுத்துகின்ற மாபெரும் நகரத்தைக் குறிக்கிறாள்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in