வெளிப்படுத்தல் 14
14
சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவர்
1பின்பு நான் பார்த்தபோது இதோ ஆட்டுக்குட்டியானவர், அங்கே சீயோன் மலையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருடைய பெயரும், அவருடைய பிதாவின் பெயரும் எழுதப்பட்டிருந்த 1,44,000 பேர் அவருடன் நின்று கொண்டிருந்தார்கள். 2அப்போது, பரலோகத்திலிருந்து ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்து ஓடுகின்ற வெள்ளத்தின் இரைச்சலைப் போலவும், பலமாய் முழங்குகிற இடிமுழக்கத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. நான் கேட்ட அந்தத் தொனி வீணை வாசிக்கின்றவர்கள் தங்கள் வீணைகளை மீட்டுகின்ற நாதம் போல் இருந்தது. 3அரியணைக்கு முன்பாகவும், அந்த நான்கு உயிரினங்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் அவர்கள் ஒரு புதிய பாடலைப் பாடினார்கள். பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த 1,44,000 பேரைத் தவிர வேறு எவராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. 4அவர்கள் பெண்களால் தங்களைத் தீட்டுப்படுத்தாமல் தூய்மையைக் காத்துக்கொண்டவர்கள். ஆட்டுக்குட்டியானவர் போகின்ற இடங்களுக்கெல்லாம் அவரைப் பின்பற்றி போகின்றவர்கள். இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்குமான முதற்கனியாக, மனிதரிடையே இருந்து மீட்கப்பட்டவர்கள். 5அவர்களுடைய வாய்களில் இருந்து ஒரு பொய்யும் வெளிப்படவில்லை. அவர்கள் எவ்வித குற்றமும் காணப்படாதவர்கள்.
மூன்று இறைதூதர்கள்
6பின்பு இன்னொரு இறைதூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், கோத்திரத்தினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது. 7அவன் உரத்த குரலில், “இறைவனுக்கு பயப்படுங்கள், அவருக்கே மகிமையைக் கொடுங்கள். ஏனெனில் அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்துவிட்டது. வானங்களையும், பூமியையும், கடலையும், நீரூற்றுகளையும் படைத்தவரையே ஆராதனை செய்யுங்கள்” என்று சொன்னான்.
8இரண்டாவது இறைதூதன் அவனைத் தொடர்ந்து வந்து, “ ‘விழுந்தது! மகா பாபிலோன் விழுந்து போயிற்று,’#14:8 ஏசா. 21:9 அவளே தனது பாலியல் ஒழுக்கக்கேடு எனப்பட்ட கோப மதுவை, எல்லா மக்கள் இனத்தவரும் அருந்தும்படி செய்தவள்” என்றான்.
9மூன்றாவது இறைதூதன் அவர்களைத் தொடர்ந்து வந்து, உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது மிருகத்தையும் மிருகத்தின் உருவச் சிலையையும் வணங்கி, தனது நெற்றியிலோ அல்லது கையிலோ அதனுடைய அடையாளத்தைப் பெற்றுக்கொண்டால், 10அவனும் இறைவனுடைய கோபத்தின் மதுவைக் குடிப்பான். அது அவருடைய கோபத்தின் கிண்ணத்தில், முழு வலிமையுடன் ஊற்றப்பட்டிருக்கிறது. அவன் பரிசுத்த தூதருக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் எரிகின்ற கந்தகத்தினால் வரும் வேதனையை அனுபவிப்பான். 11அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் மேலே எழுந்துகொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவச் சிலையையும் வணங்குகின்றவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கின்றவர்களுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதல் இருக்காது.” 12இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து இயேசுவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கும் பரிசுத்தவான்கள், இந்நிலையில் பொறுமையோடு சகிப்புத் தன்மை உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
13அப்போது நான், பரலோகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “இன்று முதல், கர்த்தரில் விசுவாசிகளாக மரணிக்கின்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எழுது” என அது சொன்னது.
அதற்கு பரிசுத்த ஆவியானவர், “ஆம், அவர்கள் தங்களுடைய கடின உழைப்பிலிருந்து இளைப்பாறுவார்கள். ஏனெனில் அவர்களுடைய நற்செயல்களும் அவர்களுடனேயேகூடப் போகும்” என்றார்.
பூமியின் அறுவடை
14பின்பு நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக ஒரு வெண்ணிற மேகத்தையும், அந்த மேகத்தின் மேல் மனுமகனைப் போல் ஒருவர் அமர்ந்திருப்பதையும் கண்டேன்.#14:14 தானி. 7:13. அவருடைய தலையில் ஒரு தங்கக் கிரீடமும், கையில் கூர்மையான ஒரு அரிவாளும் இருந்தன. 15அப்போது இன்னொரு இறைதூதன் ஆலயத்தைவிட்டு வெளியே வந்து மேகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவரை நோக்கி உரத்த சத்தமிட்டு அழைத்து, “உம்முடைய அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறுவடைக்கான காலம் வந்துவிட்டது. ஏனெனில் பூமியின் அறுவடை முற்றிவிட்டது” என்றான். 16எனவே மேகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளை பூமியின் மேல் நீட்டினார். அப்போது பூமி அறுவடை செய்யப்பட்டது.
17பரலோகத்திலுள்ள ஆலயத்திலிருந்து இன்னொரு இறைதூதன் வெளியே வந்தான். அவனும் கூர்மையான ஒரு அரிவாளை வைத்திருந்தான். 18வேறொரு இறைதூதன் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் நெருப்புக்குப் பொறுப்பாயிருக்கின்றவன். அவன் கூர்மையான அரிவாளை வைத்திருந்த இறைதூதனிடம் உரத்த குரலில், “உன்னுடைய கூர்மையான அரிவாளை எடுத்து, பூமியின் திராட்சைக் கொடியிலிருந்து திராட்சை பழக் குலைகளை அறுத்து சேர்த்துக்கொள். ஏனெனில், அதன் திராட்சைப் பழங்கள் பழுத்துவிட்டன” என்றான். 19அப்போது அந்த இறைதூதன், தனது அரிவாளை பூமியின் மேல் நீட்டி, பூமியின் திராட்சைப் பழங்களை வெட்டி எடுத்து, இறைவனுடைய கோபத்தின் பெரிய திராட்சை ஆலைக்குள் எறிந்தான். 20அவை நகரத்திற்கு வெளியே திராட்சை ஆலையில் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையிலிருந்து இரத்தம் வெளியே பெருக்கெடுத்து, குதிரைகளின் கடிவாளம் வரை உயர்ந்து#14:20 கடிவாளம் வரை உயர்ந்து – அதாவது சுமார் ஒன்றரை மீற்றர் உயரத்திற்கு உயர்ந்து. பெருகி, சுமார் 296 கிலோ மீட்டர்#14:20 296 கிலோ மீட்டர் – கிரேக்க மொழியில் 1,600 ஸ்டேடியா என்றுள்ளது. 1 ஸ்டேடியா என்பது சுமார் 185 மீற்றர் தூரம். தூரத்துக்குப் பாய்ந்தது.
Currently Selected:
வெளிப்படுத்தல் 14: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.