YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 11

11
இரண்டு சாட்சிகள்
1அப்போது அளவுகோலைப் போன்ற ஒரு பிரம்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. பின்பு எனக்குச் சொல்லப்பட்டதாவது: “போ, இறைவனுடைய ஆலயத்தையும் பலிபீடத்தையும், அங்கே ஆராதனை செய்கின்றவர்களையும் கணக்கிட்டு அளவெடுத்துக்கொள். 2ஆனால், வெளிமுற்றத்தை விட்டுவிடு. அதை அளக்காதே. ஏனெனில், அது யூதரல்லாத மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் 42 மாதங்களுக்கு பரிசுத்த நகரத்தை மிதிப்பார்கள். 3நான் என்னுடைய இரண்டு சாட்சிகளுக்கும் வல்லமை கொடுப்பேன். அவர்கள் துக்க உடையை அணிந்துகொண்டு, 1,260 நாட்களுக்கு இறைவாக்கு உரைப்பார்கள்.” 4பூமியின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கின்ற “இரண்டு ஒலிவ மரங்களும்” இரண்டு குத்துவிளக்குகளும் இவர்களே.#11:4 சக. 4:3,11,14. 5யாராவது அவர்களுக்குத் தீங்கு செய்ய முயன்றால், அவர்களுடைய வாய்களிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அவர்களுடைய பகைவர்களை அழித்து விடும். அவர்களுக்குத் தீங்கு செய்ய விரும்புகின்றவர்கள் இவ்விதமாகவே மரணமடைய வேண்டும். 6அவர்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில், மழை பெய்யாதபடி வானத்தை அடைத்து விடுவதற்கு வல்லமை உடையவர்களாய் இருப்பார்கள். அத்துடன் தண்ணீரை இரத்தமாக மாற்றுவதற்கும், தாங்கள் விரும்பியபோதெல்லாம் எல்லாவிதமான வாதைகளினாலும் பூமியைத் தண்டிப்பதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்.
7அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகின்ற மிருகம் அவர்களைத் தாக்கும். அது அவர்களை வெற்றிகொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். 8அப்போது அந்த சாட்சிகளின் உடல்கள், அந்தப் பெரிய நகரமான எருசலேமின் வீதியில் கிடக்கும். இந்தப் பெரிய நகரம் சோதோம் என்றும், எகிப்து என்றும் அடையாளமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்திலேதான் அவர்களுடைய ஆண்டவரும் சிலுவையில் அறையப்பட்டார். 9அவர்களுடைய சடலங்களை எல்லா மக்களையும், கோத்திரங்களையும், மொழியினர்களையும், சமூகங்களையும், இனங்களையும் சேர்ந்தவர்கள் மூன்றரை நாட்களுக்கு உற்றுப் பார்ப்பார்கள். அந்த உடல்களை அடக்கம் செய்ய அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 10அந்த இரண்டு இறைவாக்கினரும் பூமியில் வாழ்கின்றவர்களை துன்புறுத்தி வேதனைப்படுத்தியதால், பூமியில் குடியிருக்கின்றவர்கள் அவர்களை ஏளனம் செய்து மகிழ்வார்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகளை அனுப்பி கொண்டாடுவார்கள்.
11ஆனால் மூன்றரை நாட்களுக்குப் பின், இறைவனிடமிருந்து அவர்களுக்குள் உயிர்மூச்சு#11:11 எசே. 37:5,14 வந்தது. அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைக் கண்ட எல்லோரும், பெரும் அச்சம் கொண்டார்கள். 12பின்பு பரலோகத்திலிருந்து ஒரு குரல் அந்த இரண்டு சாட்சிகளையும் நோக்கி உரத்த சத்தமாக, “இங்கே மேலே வாருங்கள்” என்று சொன்னது. அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் ஒரு மேகத்தின் மேலேறிப் பரலோகத்துக்குப் போனார்கள்.
13அந்நேரத்திலேயே, அங்கு ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தப் பட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது. அந்தப் பூமியதிர்ச்சியில் ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். அதற்குத் தப்பியவர்களோ, பெரும் அச்சம் கொண்டவர்களாய் பரலோகத்தின் இறைவனுக்கு மகிமையைச் செலுத்தினார்கள்.
14இரண்டாவது பேரழிவும் கடந்து போயிற்று. மூன்றாவது பேரழிவோ விரைவாக வருகின்றது.
ஏழாவது எக்காளம்
15ஏழாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது பரலோகத்தில் உரத்த சத்தமாய் குரல்கள் முழங்கி,
“உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும்,
அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகி விட்டது.
அவரே என்றென்றும் ஆளுகை செய்வார்”
என்றன. 16அப்போது இறைவனுக்கு முன்பாக, தங்களுடைய அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு, 17அவர்கள் சொன்னதாவது:
“இருக்கின்றவரும், இருந்தவருமான எல்லாம் வல்ல இறைவனாகிய
கர்த்தாவே, உமக்கே நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
ஏனென்றால், நீர் உம்முடைய மிகுந்த வல்லமையை எடுத்துக் கொண்டவராய்
ஆளுகை செய்யத் தொடங்கி விட்டீர்.
18மக்கள் இனத்தார் சினம் கொண்டனர்,
உம்முடைய உக்கிர கோபம் வெளிப்பட்டது.
இறந்தவர்களை நியாயம் தீர்ப்பதற்கான வேளை வந்துவிட்டது.
உம்முடைய ஊழியக்காரர்களாகிய இறைவாக்கினருக்கும், உம்முடைய பரிசுத்தவான்களுக்கும்,
உம்முடைய பெயரில் பயபக்தியாயிருக்கின்ற சிறியோர், பெரியோர் யாவருக்கும்
வெகுமதி கொடுப்பதற்கான வேளையும் வந்துவிட்டது.
பூமியை அழிக்கின்றவர்களை அழிப்பதற்கான வேளையும் வந்துவிட்டது.”
19பின்பு பரலோகத்திலுள்ள இறைவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. அப்போது அவருடைய ஆலயத்திலுள்ள அவருடைய உடன்படிக்கையின் பெட்டகம் காணப்பட்டது. அவ்வேளையில் மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கத்தின் சத்தங்களும், பூமியதிர்ச்சியும், பெரிய ஆலங்கட்டி மழையும் ஏற்பட்டன.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in