YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 1

1
முன்னுரை
1இது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. விரைவில் நிகழவிருக்கும் சம்பவங்கள் என்ன என்பதைத் தமது ஊழியர்களுக்கு காண்பிப்பதற்காக, இறைவன் இந்த வெளிப்பாட்டை இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுத்தார். அவர் தமது தூதனை தமது ஊழியரான யோவானிடம் அனுப்பி இதை அவருக்குத் தெரியப்படுத்தினார். 2அவர் இறைவனுடைய வார்த்தையைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் தான் கண்ட எல்லாவற்றையும் சாட்சியாக அறிவித்தார். 3இவை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டதனால், இந்த இறைவாக்கின் வார்த்தைகளை வாசிக்கின்றவனும், இதைக் கேட்கின்றவர்களும், இதில் எழுதியிருப்பதைக் கடைப்பிடித்து நடந்துகொள்வோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
வாழ்த்துரையும் இறை புகழும்
4யோவானாகிய நான்,
ஆசியாவிலுள்ள#1:4 ஆசியாவிலுள்ள – இது அக்காலத்து ரோம ஆட்சிக்கு உட்பட்ட ஒரு மாகாணமாகும். தற்காலத்து நவீன மேற்கு துருக்கியைச் சேர்ந்த சில பட்டணங்கள் அதில் உள்ளடங்கியிருந்தன. ஏழு திருச்சபைகளுக்கு எழுதுகின்றதாவது:
இருக்கின்றவரும், இருந்தவரும், வரவிருகின்றவருமான அவரிடமிருந்து உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. அவருடைய அரியணைக்கு முன்பாக இருக்கின்ற ஏழு ஆவிகளிடமிருந்தும், 5இறந்தவர்களிடையே முதற்பேறானவரும், பூமியிலுள்ள அரசர்களை ஆளுகை செய்கின்றவரும், உண்மையான சாட்சியுமாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நம்மில் அன்பு செலுத்தி, தமது இரத்தத்தினாலே நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி, 6நம்மை ஒரு அரசாகவும், தமது இறைவனும் பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி மதகுருக்களாகவும் நம்மை நியமித்திருக்கின்ற இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக. ஆமென்.
7“இதோ, இயேசு மேகங்கள் மீது வருகின்றார்”#1:7 தானி. 7:13
அத்துடன், “எல்லாக் கண்களும் அவரைக் காணும்,
அவரைக் குத்தியவர்களும்#1:7 குத்தியவர்களும் – அவரை ஈட்டியினாலும் ஆணிகளினாலும் சிலுவையில் அறைந்து கொன்றவர்களும், அதற்கும் காரணமானவர்கள் அனைவரும். அவரை நோக்கிப் பார்ப்பார்கள்;”#1:7 சக. 12:10
பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் பொருட்டு புலம்புவார்கள்.”
அது அப்படியே ஆகட்டும்! ஆமென்.
8“தொடக்கமும் முடிவும்#1:8 தொடக்கமும் முடிவும் – கிரேக்க மொழியில் அல்பா, ஒமேகா என்பன கிரேக்க அரிச் சுவடியின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களைக் குறிக்கின்றன நானே, இருக்கின்றவரும் இருந்தவரும் வரப் போகின்றவருமாகிய எல்லாம் வல்லர் நானே” என்று இறைவனாகிய கர்த்தர் சொல்கின்றார்.
யோவானுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனம்
9கிறிஸ்துவில் நமக்குரிய துன்பத்திலும், இறையரசிலும், பொறுமையோடு சேர்ந்த சகிப்புத் தன்மையிலும் உங்கள் பங்காளியாயிருக்கும் உங்களின் சகோதரனான யோவானாகிய நான், இறைவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்ததாலும், இயேசுவுக்கு சாட்சி என்ற காரணத்தாலும் நாடு கடத்தப்பட்டு பத்மு தீவில் இருந்தேன். 10கர்த்தருடைய நாளிலே நான் பரிசுத்த ஆவியானவரில் நிரப்பப்பட்டு இருக்கையில், எனக்குப் பின்னால் எக்காளத்தைப் போன்ற உரத்த சத்தமான ஒரு குரலைக் கேட்டேன். 11அது என்னிடம், “நீ காண்கின்றதை ஒரு புத்தகச் சுருளில் எழுதி, அதை எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய பட்டணங்களிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கும் அனுப்பு” என்று சொன்னது.
12நான் திரும்பி என்னோடு பேசிய குரலின் பக்கமாய்ப் பார்த்தேன். நான் திரும்பியபோது, ஏழு தங்க குத்துவிளக்குகளைக் கண்டேன். 13அந்தக் குத்துவிளக்குகளின் நடுவே மனுமகனைப் போன்ற ஒருவர் நின்றார்.#1:13 தானி. 7:13 அவர் அணிந்திருந்த உடை அவருடைய பாதம் வரை நீளமாயிருந்தது. அவர் தம்முடைய மார்பைச் சுற்றி ஒரு தங்கப் பட்டியைக் கட்டியிருந்தார். 14அவருடைய தலைமுடி வெள்ளைக் கம்பளியைப்போல, உறை பனியைப்போல வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீச்சுவாலை போல் இருந்தன. 15அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் ஒளிருகின்ற தூய்மையான வெண்கலத்தைப் போல் இருந்தன. அவருடைய குரல் பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப் போல் இருந்தது. 16அவர் தனது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இரு பக்கமும் கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டது. அவருடைய முகம் முழுமையாய் பிரகாசிக்கின்ற சூரியனைப் போல் இருந்தது.
17நான் அவரைப் பார்த்தபோது மரணமடைந்தவனைப் போல் அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்போது அவர் தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன். 18நானே வாழ்கின்றவர். நான் மரணித்தேன், ஆனால் இதோ நான் என்றென்றும் உயிருடன் வாழ்கின்றவராய் இருக்கின்றேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய சாவிகளை நானே வைத்திருக்கிறேன்.
19“ஆகவே நீ பார்த்தவைகளையும், இப்போது இருப்பவைகளையும், இனிமேல் நிகழ இருப்பவைகளையும் எழுது. 20நீ என்னுடைய வலது கரத்தில் கண்ட ஏழு நட்சத்திரங்கள் மற்றும் ஏழு தங்க குத்துவிளக்குகளின் மறைபொருள் இதுவே: ஏழு நட்சத்திரங்களும் ஏழு திருச்சபைகளின் இறைதூதர்களையும், ஏழு குத்துவிளக்குகளும் ஏழு திருச்சபைகளையும் குறிக்கின்றன.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in