மாற்கு 15
15
பிலாத்துவின் முன் இயேசு
1அதிகாலையிலேயே தலைமை மதகுருக்கள், மூப்பர்களுடனும் நீதிச்சட்ட ஆசிரியர்களுடனும் முழு நியாயசபையினருடனும் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவை பிணைத்துக் கட்டி பிலாத்துவிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள்.
2பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கின்றபடியேதான்” என்றார்.
3தலைமை மதகுருக்கள் அநேக குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தினார்கள். 4எனவே பிலாத்து திரும்பவும் அவரிடம், “நீ பதில் சொல்ல மாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுக்களை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்றான்.
5இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான்.
6பண்டிகையின்போது, மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது. 7அந்நாட்களில் கிளர்ச்சியில் ஈடுபட்டு கொலை செய்ததற்காக சில கிளர்ச்சிக்காரர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பரபாஸ் என்ற ஒருவனும் இருந்தான். 8மக்கள் கூட்டமாக வந்து, வழக்கமாக செய்துவந்தது போல் இம்முறையும் தங்களுக்காக ஒருவனை விடுவிக்கும்படி பிலாத்துவிடம் கேட்டுக்கொண்டார்கள்.
9அப்போது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். 10தலைமை மதகுருக்கள் பொறாமையின் காரணமாகவே இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். 11ஆனால் தலைமை மதகுருக்களோ பரபாசையே விடுதலை செய்ய வேண்டும் என்று பிலாத்துவிடம் கேட்கச் சொல்லி கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
12எனவே பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், நீங்கள் யூதருடைய அரசன் என்று சொல்கின்ற இவனுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
13அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
14பிலாத்து, அவர்களைப் பார்த்து, “ஏன், அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டான்.
ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டார்கள்.
15பிலாத்து, கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி பரபாஸை அவர்களுக்காக விடுதலை செய்தான். இயேசுவையோ அவன் சாட்டையால் அடித்து சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்படைத்தான்.
இராணுவ வீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்
16இராணுவ வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டு சென்று மற்ற எல்லா இராணுவ வீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள். 17அவர்கள் அவருக்கு கருஞ்சிவப்பு மேலாடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள். 18பின்பு அவர்கள், “யூதரின் அரசனே வாழ்க!” என்று அவரை ஏளனம் செய்தார்கள். 19அத்துடன் ஒரு தடியினால் திரும்பத் திரும்ப அவரின் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, அவர் முன்பாக முழந்தாழிட்டு, அவரை வணங்கினார்கள். 20இவ்வாறு அவரை ஏளனம் செய்த பின்பு அந்த கருஞ்சிவப்பு மேலாடையைக் கழற்றி, மீண்டும் அவருடைய உடையையே அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறைவதற்காக கொண்டுபோனார்கள்.
இயேசு சிலுவையில் அறையப்படல்
21அப்போது நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியாய் வந்து கொண்டிருந்த சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதனைக் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமந்து வரும்படி இராணுவ வீரர்கள் அவனை வற்புறுத்தினார்கள்; அவன் அலெக்சாந்தர் மற்றும் ரூபு என்பவர்களின் தகப்பன். 22அவர்கள் இயேசுவை மண்டையோட்டின் இடம் என்று அர்த்தமுள்ள கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்து, 23வெள்ளை கற்றாழைச் சாறு கலந்த திராட்சை ரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவரோ அதைக் குடிக்க மறுத்தார். 24பின்பு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடையில் யார் எதை எடுத்துக்கொள்வது என்று சீட்டுப் போட்டு அவற்றைப் பங்கிட்டுக் கொண்டார்கள்.
25அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. 26அத்தோடு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டாக சிலுவையில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது:
“யூதருடைய அரசன்.”
27அவர்கள் அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும், இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்வர்களையும் அவருடனே சிலுவைகளில் அறைந்தார்கள். 28இதன் மூலமாய், “குற்றவாளிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார்”#15:28 சில பிரதிகள், லூக். 22:37 இல் உள்ளது போன்ற சொற்களை இவ் வசனத்தில் சேர்த்துள்ளன. என்ற வேதவசனம் நிறைவேறியது. 29அவ்வழியாய் கடந்து சென்றவர்கள் அவரைப் பழித்துரைக்கும் விதமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே, 30சிலுவையிலிருந்து இறங்கி வந்து உன்னை நீயே காப்பாற்றிக்கொள்!” என்றார்கள். 31அவ்விதமாகவே தலைமை மதகுருக்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் அவரைக் குறித்து ஒருவரோடொருவர் ஏளனமாய்ப் பேசி, “இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னையோ காப்பாற்றிக்கொள்ள முடியாதிருக்கிறான்! 32இஸ்ரயேலின் அரசனான இந்த மேசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்போது அதைக் கண்டு நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். அப்படியே அவருடனே சிலுவையில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
இயேசுவின் மரணம்
33பகல் பன்னிரண்டு மணியானபோது, பூமியெங்கும் இருள் சூழ ஆரம்பித்து பிற்பகல் மூன்று மணி வரை நீடித்திருந்தது. 34பிற்பகல் மூன்று மணியானபோது இயேசு உரத்த குரலில், “ஏலோயி, ஏலோயி, லாமா சபக்தானி” என்று கதறினார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?”#15:34 சங். 22:1 என்பதாகும்.
35அருகே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டபோது, “இதோ, இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள்.
36அப்போது ஒருவன் ஓடிப் போய் கடற் பஞ்சை எடுத்து புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து ஒரு தடியில் கட்டி அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்து, “இப்போது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகின்றானோ பார்ப்போம்” என்றான்.
37அப்போது இயேசு சத்தமிட்டுக் கதறி தமது இறுதி மூச்சை விட்டார்.
38அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்று கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதி#15:39 நூற்றுக்குத் தளபதி என்பது நூறு காலாட் படையினருக்கு தளபதி அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டு, “நிச்சயமாகவே இவர் இறைவனுடைய மகனே தான்” என்றான்.
40சில பெண்கள் தூரத்தில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள். 41அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரைப் பின்பற்றி, அவருடைய தேவைகளைக் கவனித்தவர்கள் இவர்கள்தான். அத்தோடு, அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேக பெண்களும் அங்கே இருந்தார்கள்.
இயேசுவின் அடக்கம்
42அது ஓய்வுநாளுக்கு முந்திய நாளான ஆயத்த நாளாயிருந்தது. மாலை வேளையானபோது, 43அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்தவனும், நியாயசபையின் முக்கிய அங்கத்தவனும், இறைவனின் அரசுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன், துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். 44இயேசு அதற்குள் இறந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்ட பிலாத்து வியப்படைந்து நூற்றுக்குத் தளபதியை அழைத்து, “இயேசு அதற்குள் இறந்துவிட்டாரா?” என்று கேட்டான். 45அவன் நூற்றுக்குத் தளபதியிடமிருந்து, அதை உறுதி செய்துகொண்ட பின், இயேசுவின் உடலை யோசேப்பிடம் கையளித்தான். 46எனவே யோசேப்பு விலையுயர்ந்த மெல்லிய துணியைக் கொண்டுவந்து அவரது உடலைக் கீழே இறக்கி துணியினால் சுற்றி, கற்பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்து அதன் வாசலில் ஒரு கல்லை உருட்டி மூடினான். 47மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் அவரை வைத்த இடத்தைப் பார்த்தார்கள்.
Currently Selected:
மாற்கு 15: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.