YouVersion Logo
Search Icon

யூதா 1

1
1இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், யாக்கோபின் சகோதரனுமான யூதா,
பிதாவாகிய இறைவனுக்குள்ளாக நேசிக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவுக்குள் காக்கப்பட்டவர்களுமான அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகின்றதாவது:
2இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களிடம் பெருகுவதாக.
இறைபக்தியற்றவர்களுக்குத் தண்டனை
3பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுமென நான் ஆவலாய் இருக்கும்போது, பரிசுத்தவான்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த விசுவாசத்தைக் காத்துக்கொள்ள ஊக்கத்துடன் போராடும்படி உங்களுக்கு எழுத வேண்டியது அவசியம் என்று உணர்ந்தேன். 4நமது இறைவனுடைய கிருபையை ஒழுக்கக்கேடாக மாற்றி, ஒரே ஆண்டவரும் எஜமானுமாகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கின்ற இறைபக்தியற்ற சிலர் திருட்டுத்தனமாக உங்கள் மத்தியிலே நுழைந்திருக்கிறார்கள். அவர்களுடைய அழிவு ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
5இதையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்திலிருந்து விடுவித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார். 6அத்துடன், தங்களுடைய மேன்மையான அதிகாரத்தில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட வானவர்களையும் அந்த மாபெரும் நாளில் தீர்ப்பளிப்பதற்காக, நித்தியமான சங்கிலிகளால் பிணைத்து, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். 7அதுபோலவே சோதோம், கொமோராவையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டுக்கும் இயல்புக்கு மாறான பாலுறவுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்து, நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு வேதனைப்படப் போகின்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கின்றார்கள்.
8அதேவிதமாக, கனவு காண்கின்ற இவர்களும் தங்கள் உடலை அசுத்தப்படுத்தி, அதிகாரத்தை எதிர்த்து, மாட்சிமையான வானவர்களை அவதூறு செய்கின்றார்கள். 9ஆனால் தலைமைத் தூதனான மிகாவேல், மோசேயின் உடலைக் குறித்து பிசாசுடன் வாக்குவாதம் செய்தபோது, பிசாசுக்கு எதிராக அவதூறான எந்தவொரு குற்றச்சாட்டையும் கொண்டுவரத் துணியாமல் அவனிடம், “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று சொன்னான். 10ஆனால் இவர்களோ, தங்களால் விளங்கிக்கொள்ள இயலாத எல்லாவற்றுக்கும் எதிராக அவதூறாகப் பேசி, மானிட உணர்வினால் அறிந்துகொள்வதையே செய்து, அறிவற்ற மிருகங்களைப் போல அழிந்து போகின்றார்கள்.
11இவர்களுக்கு ஐயோ பேரழிவு! இவர்கள் காயீனின் வழியில் நடந்து, பிலேயாம் தனது ஆதாயத்திற்காக செய்த தவறைத் தாங்களும் செய்ய விரைந்து, கோராகைப் போல கலகம் செய்து அழிந்து போகப் போகின்றார்கள்.
12இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் பயமின்றி கலந்துகொண்டு அவற்றை மாசுபடுத்தி, தங்களையே மேய்க்கின்ற மேய்ப்பர்களாய் இருக்கின்றார்கள். இவர்கள் காற்றோடு செல்லும் நீரற்ற மேகங்கள். இவர்கள் இலையுதிர்ந்த, கனி கொடாத, வேரோடு பிடுங்கப்பட்ட, இரண்டு முறை உயிரிழந்து போன மரங்கள். 13இவர்கள் தங்கள் வெட்கக்கேட்டை நுரையாகத் தள்ளும் கொந்தளிக்கும் கடல் அலைகளும், வழிதப்பி அலைகின்ற நட்சத்திரங்களுமாய் இருக்கின்றார்கள். நிலையான காரிருளே இவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
14ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையான ஏனோக்கு இவர்களைக் குறித்து இறைவாக்கு உரைத்து: “பாருங்கள், கர்த்தர் தமது ஆயிரம் ஆயிரமான பரிசுத்தர்களுடன் வருகின்றார். 15அனைவரையும் நியாயம் தீர்க்கவும், அவர்கள் அனைவரும் இறைபக்தியற்ற வழியில் செய்த இறைபக்தியற்ற அனைத்துச் செயல்களுக்காகவும் இறைபக்தியற்ற பாவிகள் அவரை எதிர்த்து பேசிய ஏளனமான வார்த்தைகளுக்காகவும் நியாயத்தீர்ப்பளிக்க வருகின்றார்” என்றான். 16இவர்கள் முறையிடுகின்றவர்களும், குறை சொல்பவர்களும், தங்களுடைய தீய ஆசைகளின்படி நடக்கின்றவர்களும், சுய பெருமைகளை பேசுகின்றவர்களும், தங்கள் சுயநலனுக்காக மற்றவர்களுக்கு முகஸ்துதி செய்கின்றவர்களுமாக இருக்கின்றார்கள்.
விடாமுயற்சிக்கு அழைப்பு
17பிரியமானவர்களே, நீங்கள் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் முன்னறிவித்தவைகளை நினைவில் வைத்திருங்கள். 18“கடைசிக் காலங்களில், ஏளனம் செய்கின்றவர்கள் இறைபக்தியற்ற தங்கள் தீய ஆசைகளின்படி நடப்பார்கள்” என்று அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருந்தார்களே. 19இவர்கள், பிரிவினை உண்டாக்குகின்றவர்களும், மானிட இயல்புள்ளவர்களும், ஆவியில்லாதவர்களுமாய் இருக்கின்றார்கள்.
20அன்பானவர்களே, நீங்களோ பரிசுத்த ஆவிக்குள் மன்றாடி, மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 21இறைவனின் அன்பில் நிலைத்திருந்து, நித்திய வாழ்வுக்காக நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்துக்காகக் காத்திருங்கள்.
22நம்பத் தயங்குவோரிடம் இரக்கமாயிருங்கள். 23மற்றவர்களை தீயிலிருந்து#1:23 தீயிலிருந்து என்பது தண்டனைத்தீர்ப்பின் நெருப்பிலிருந்து. வெளியே எடுத்து இரட்சியுங்கள், ஏனையவர்களுக்கு பயத்தோடு இரக்கம் காட்டுங்கள், பாவ மனித இயல்பினால்#1:23 பாவ மனித இயல்பினால் – கிரேக்க மொழியில் மாம்சம் என்றுள்ளது. கறைபட்ட அவர்களது ஆடைகளையும்கூட வெறுத்துத் தள்ளுங்கள்.
இறைவனைப் புகழ்தல்
24உங்களை விழுந்து போகாதபடி காக்க வல்லவராயும், குற்றமற்றவர்களாய் மகிழ்ச்சியுடன் தமது மகிமையில் நிறுத்த வல்லவராயும் இருக்கின்ற, 25நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும், யுகங்களுக்கு முன்பும், இப்போதும், என்றென்றும் உண்டாவதாக. ஆமென்.

Currently Selected:

யூதா 1: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in