YouVersion Logo
Search Icon

யோவான் 21

21
கடற்கரையில் இயேசு
1இதற்குப் பின்பு, இயேசு திரும்பவும் தமது சீடர்களுக்கு திபேரியா#21:1 திபேரியா என்பது கலிலேயா கடல் கடல் அருகே காட்சியளித்தார். அது இவ்வாறு நடந்தது: 2சீமோன் பேதுருவும், திதிமு என்று அழைக்கப்பட்ட தோமாவும், கலிலேயாவிலுள்ள கானா ஊரைச் சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், வேறு இரண்டு சீடர்களும் கூடியிருந்தார்கள். 3சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகின்றேன்” என்றான். மற்றவர்களும், “நாங்களும் உன்னுடன் வருகின்றோம்” என்றார்கள். எனவே அவர்கள் புறப்பட்டு ஒரு படகில் ஏறிப் போனார்கள். ஆனால் அந்த இரவு, அவர்கள் மீன்கள் எதையுமே பிடிக்கவில்லை.
4அதிகாலையிலே இயேசு கடற்கரையிலே நின்றார். ஆனால் அவர் இயேசு என்பதை சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.
5இயேசு அவர்களை அழைத்து, “பிள்ளைகளே, உங்களிடம் மீன்கள் ஏதாவது இருக்கின்றதா?” என்று கேட்டார்.
அவர்கள், “இல்லை,” என்றார்கள்.
6“வலையைப் படகின் வலதுபுறமாக வீசுங்கள். அப்போது உங்களுக்கு மீன்கள் அகப்படும்” என்றார். அவர்கள் அப்படி செய்தபோது, ஏராளமான மீன்கள் அகப்பட்டன. அதனால் அந்த வலையை அவர்களால் இழுத்தெடுக்க முடியவில்லை.
7அப்போது இயேசுவுக்கு அன்பான சீடன், “இவரே ஆண்டவர்” என்று பேதுருவிடம் கூறினான். “இவரே ஆண்டவர்” என்று சொன்னதை சீமோன் பேதுரு கேட்டதும், கழற்றி வைத்திருந்த மேலங்கியை இடையில் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தான். 8மற்றச் சீடர்களோ மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு படகிலே வந்தார்கள். ஏனெனில் அவர்கள் கரையிலிருந்து அதிக தூரத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஏறக்குறைய இருநூறு முழ#21:8 இருநூறு முழ என்பது தொண்ணூறு மீட்டர் தூரத்திலேயே இருந்தார்கள். 9அவர்கள் கரைக்கு வந்தபோது, அங்கே எரிகின்ற நெருப்புத் தணலின் மேல் மீன் வைக்கப்பட்டிருப்பதையும், சில அப்பங்கள் இருப்பதையும் கண்டார்கள்.
10இயேசு அவர்களிடம், “நீங்கள் பிடித்த மீன்களிலும் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றார். 11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையை கரைக்கு இழுத்துக் கொண்டுவந்தான். வலை நூற்று ஐம்பத்து மூன்று பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அவ்வளவு மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12இயேசு அவர்களிடம், “வாருங்கள், எழுந்து உங்கள் காலை உணவை அருந்துங்கள்” என்றார். அவருடைய சீடர்களில் ஒருவரும் “நீர் யார்?” என்று கேட்கத் துணியவில்லை. அவர் ஆண்டவர் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். 13இயேசு வந்து அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். மீனையும் அப்படியே கொடுத்தார். 14இயேசு இறந்தோரிலிருந்து உயிருடன் எழுந்த பின்பு தமது சீடர்களுக்குக் காட்சியளித்தது இது மூன்றாவது முறையாகும்.
இயேசுவும் பேதுருவும்
15அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு இயேசு, சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ என்னில் உண்மையாகவே அதிக அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்” என்றான்.
அப்போது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்றார்.
16இயேசு இரண்டாவது முறை அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னில் அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று உமக்குத் தெரியும்” என்றான்.
அப்போது இயேசு, “என் செம்மறியாடுகளை மேய்ப்பாயாக” என்றார்.
17மூன்றாவது தடவை அவர் அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார்.
மூன்றாவது தடவையும், “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று இயேசு கேட்டதனால் பேதுரு துக்கமடைந்து, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறீர்” என்றான்.
இயேசு அவனிடம், “என் செம்மறியாடுகளைப் பராமரிப்பாயாக. 18நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நீ இளைஞனாய் இருந்தபோது, நீயே ஆடை அணிந்துகொண்டு, நீ விரும்பிய இடத்திற்குப் போனாய்; ஆனால் நீ முதிர்வயதாகும்போது, நீ உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு ஆடை அணிவித்து, நீ போக விரும்பாத இடத்திற்கு உன்னை வழிநடத்திக்கொண்டு போவான்” என்றார். 19பேதுரு எவ்விதமான மரணத்தை ஏற்றுக்கொண்டு, இறைவனை மகிமைப்படுத்தப் போகின்றான் என்பதைக் காட்டும்படியே, இயேசு இதைச் சொன்னார். பின்பு அவர் அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
20பேதுரு திரும்பிப் பார்த்து, இயேசு அன்பு செலுத்திய சீடன் பின்னாலே வருவதைக் கண்டான். இந்தச் சீடனே இரவு விருந்தின்போது, இயேசுவின் மார்புப் பக்கமாய் சாய்ந்து, “ஆண்டவரே, உம்மைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவன் யார்?” என்று கேட்டவன். 21பேதுரு அவனைக் கண்டபோது, “ஆண்டவரே இவனைக் குறித்து என்ன சொல்கின்றீர்?” என்று கேட்டான்.
22அதற்கு இயேசு, “நான் திரும்பி வரும் வரைக்கும் அவன் உயிரோடு இருக்கும்படி நான் விரும்பினால் அதுபற்றி உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்ற வேண்டும்” என்றார். 23இதனால் இந்தச் சீடன் மரணிக்க மாட்டான் என்ற பேச்சு சகோதரருக்குள்ளே#21:23 சகோதரருக்குள்ளே – சக விசுவாசிகள் என்றும் மொழிபெயர்க்கலாம் இருந்தது. ஆனால் இயேசுவோ அவன் மரணிக்க மாட்டான் என்ற அர்த்தத்தில் சொல்லாமல், “நான் திரும்பி வரும்வரை இவன் உயிரோடிருப்பதை நான் விரும்பினால் அதுபற்றி உனக்கு என்ன?” என்றே சொன்னார்.
24அந்தச் சீடனே இவற்றைக் குறித்து சாட்சி கொடுத்து, இவற்றை எழுதியவன். அவனுடைய சாட்சி உண்மையானது.
25இயேசு வேறு பல காரியங்களையும் செய்தார். அவை ஒவ்வொன்றையும் எழுதினால், எழுதப்படும் புத்தகங்களை வைப்பதற்கு முழு உலகமும் போதாமல் போகும் என்று நான் எண்ணுகிறேன்.

Currently Selected:

யோவான் 21: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in