YouVersion Logo
Search Icon

யோவான் 17

17
இயேசுவின் மன்றாடல்
1இயேசு இதைச் சொன்ன பின்பு அவர் வானத்தை நோக்கிப் பார்த்து மன்றாடினார்:
“பிதாவே, எனது வேளை வந்துவிட்டது. உமது மகன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய மகனை மகிமைப்படுத்தும். 2நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய வாழ்வைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். 3ஒரே உண்மையான இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்திய வாழ்வு. 4நீர் செய்யும்படி எனக்குக் கொடுத்த வேலையை நிறைவேற்றி முடித்து, பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன். 5பிதாவே, உலகம் உண்டாகும் முன்பே எனக்கு உம்மிடம் இருந்த மகிமையினாலே, இப்போது நீர் என்னை உம்மில் மகிமைப்படுத்தும்.
சீடர்களுக்கான மன்றாடல்
6“உலகத்திலிருந்து நீர் எனக்கு ஒப்புக்கொடுத்த இவர்களுக்கு, உம்மை நான் வெளிப்படுத்தினேன். உம்முடையவர்களாய் இருந்த இவர்களை நீர் எனக்குக் கொடுத்தீர். இவர்களும் நீர் கொடுத்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள். 7நீர் எனக்குத் தந்த அனைத்தும் உம்மிடத்திலிருந்தே வருகின்றது என்று இவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள். 8ஏனெனில் நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் இவர்களுக்குக் கொடுத்தேன். இவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். நான் உம்மிடத்திலிருந்து வந்தேன் என்று இவர்கள் நிச்சயமாய் அறிந்திருக்கிறார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவாசிக்கின்றார்கள். 9நான் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். நான் உலகத்துக்காக மன்றாடவில்லை. நீர் எனக்குக் கொடுத்திருக்கும் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். ஏனெனில் இவர்கள் உம்முடையவர்கள். 10என்னுடையதெல்லாம் உம்முடையதே, உம்முடையதெல்லாம் என்னுடையதே. இவர்கள் மூலமாய் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். 11நான் இனிமேலும் உலகத்தில் இருக்க மாட்டேன். நான் உம்மிடத்தில் வருகின்றேன். இவர்களோ இன்னும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள். ஆகவே பரிசுத்த பிதாவே, நீர் எனக்கு உம்முடைய பெயரைக் கொடுத்தீரே. அந்தப் பெயரின் வல்லமையினாலே இவர்களைக் காத்துக்கொள்ளும். எனவே நாம் ஒன்றாய் இருப்பது போலவே இவர்களும் ஒன்றாய் இருக்கட்டும். 12நான் இவர்களோடு இருந்தபோது, நீர் எனக்குக் கொடுத்த உமது பெயராலே இவர்களைக் காப்பாற்றி பாதுகாத்து வைத்திருந்தேன். வேதவசனம் நிறைவேறும்படி அழிவின் மகனைத் தவிர வேறு ஒருவரையும் நான் இழந்து போகவில்லை.
13“நான் இப்போது உம்மிடத்தில் வருகின்றேன். ஆயினும் இவர்கள் என்னுடைய மனமகிழ்ச்சியைத் தங்களுக்குள் முழுநிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி, நான் உலகத்தில் இருக்கும்போதே இவைகளைச் சொல்கின்றேன். 14நான் இவர்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறேன். உலகமோ இவர்களை வெறுத்திருக்கிறது. ஏனெனில் நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாததுபோல, இவர்களும் உலகத்திற்கு உரியவர்கள் அல்ல. 15இந்த உலகத்தைவிட்டு இவர்களை எடுத்துக்கொள்ளும் என்று நான் மன்றாடவில்லை. ஆனால் தீயவனிடமிருந்து இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றே மன்றாடுகிறேன். 16நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாதது போல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல. 17சத்தியத்தினாலே இவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வார்த்தையே சத்தியம். 18நீர் என்னை உலகத்திற்குள் அனுப்பியது போல நானும் இவர்களை உலகத்திற்குள் அனுப்பியிருக்கிறேன். 19இவர்கள் உண்மையினாலே பரிசுத்தமாக்கப்படும்படி, இவர்களுக்காக நானும் என்னை பலியாக அர்ப்பணிக்கிறேன்.”
விசுவாசிகளுக்கான இயேசுவின் மன்றாடல்
20“நான் என் சீடர்களுக்காக மாத்திரம் மன்றாடவில்லை. இவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாய், என்னில் விசுவாசம் வைக்கப் போகின்றவர்களுக்காகவும் மன்றாடுகிறேன். 21பிதாவே, நீர் என்னில் இருக்கின்றது போலவும், நான் உம்மில் இருக்கின்றது போலவும், அவர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்படி, அவர்களும் நம்மில் ஒன்றாய் இருக்கட்டும். 22நாம் ஒன்றாய் இருப்பது போலவே அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 23இவ்வாறு நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருப்பதனால், அவர்களும் முழுமையான ஒற்றுமைக்குள் கொண்டுவரப்படுவார்கள். அப்போது நீரே என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்னில் அன்பாயிருந்தது போலவே, அவர்களிலும் அன்பாயிருக்கிறீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.
24“பிதாவே, நீர் எனக்குக் கொடுத்த இவர்கள், நான் இருக்கும் இடத்திலே என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உலகம் படைக்கப்படும் முன்னே நீர் என்னில் அன்பாயிருந்ததனால், நீர் எனக்குக் கொடுத்த மகிமையை இவர்கள் காண வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.
25“நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியாவிட்டாலும் நான் உம்மை அறிவேன். நான் உம்மாலேயே அனுப்பப்பட்டேன் என்று இவர்களும் அறிந்திருக்கிறார்கள். 26நீர் என்மேல் வைத்திருக்கும் அன்பு இவர்கள் மேல் இருக்குமாறும், நான் இவர்களில் இருக்குமாறும் நான் உமது பெயரை இவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். தொடர்ந்து உம்மைத் தெரியப்படுத்துவேன்” என்றார்.

Currently Selected:

யோவான் 17: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in