YouVersion Logo
Search Icon

யாக்கோபு 5

5
ஒடுக்கும் செல்வந்தருக்கு எச்சரிக்கை
1செல்வந்தர்களே கேளுங்கள்! உங்கள் மீது வரப்போகும் துன்பங்களுக்காக அழுது புலம்புங்கள். 2உங்கள் செல்வம் அழிந்து, உங்கள் உடைகளை பூச்சிகள் அரித்தன. 3நீங்கள் இந்தக் கடைசிக் காலத்தில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறீர்களே. துருப்பிடித்த உங்கள் தங்கத்திலும் வெள்ளியிலும் உள்ள துருவே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும். அது நெருப்பைப் போல் உங்கள் உடலை அரித்தொழித்து விடும். 4பாருங்கள், உங்கள் வயலை அறுத்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கத் தவறிய கூலிப்பணம் உங்களுக்கு எதிராகக் கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் அழுகைக்குரல், எல்லாம் வல்ல கர்த்தரின் காதுகளை எட்டியிருக்கிறது. 5பூமியிலே நீங்கள் சொகுசாகவும் சுகபோகமாகவும் வாழ்ந்து, இறுதியில் கொல்லப்படுவதற்காகக் கொழுக்க வைக்கப்பட்ட ஒன்றைப் போல் உங்கள் இருதயங்களைக் கொழுக்கப் பண்ணினீர்கள். 6குற்றமற்ற மனிதரைக் குற்றவாளியாகத் தீர்த்து நீங்கள் கொலை செய்தீர்கள், அவர் உங்களை எதிர்க்கவில்லை.
துன்பத்தில் பொறுமை
7ஆகையால் பிரியமானவர்களே! ஆண்டவருடைய வருகை வரைக்கும் பொறுமையாயிருங்கள். பாருங்கள்! பயிரிடுகின்றவன் நிலத்திலிருந்து பெருமதிப்புள்ள சிறப்பான நல்ல விளைச்சலை பெற்றுக்கொள்ள பருவத்துக்கு முந்திய மழைக்காகவும் பருவ மழைக்காகவும் பொறுமையோடு காத்திருக்கிறான். 8ஆண்டவருடைய வருகை நெருங்கிவிட்டபடியால், நீங்கள் பொறுமையோடு மனதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 9பிரியமானவர்களே, நியாயாதிபதி வாசற்படியிலே நிற்கின்றபடியால், நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படாதபடி ஒருவருக்கு விரோதமாக இன்னொருவர் முறையிடாதிருங்கள்.
10பிரியமானவர்களே, துன்பங்களை எதிர்கொள்ளும் பொறுமைக்கு முன்னுதாரணமாக, கர்த்தருடைய பெயரில் பேசிய இறைவாக்கினரை எடுத்துக்கொள்ளுங்கள். 11நீங்கள் அறிந்திருக்கின்றபடி மனம் தளராதவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நாங்கள் எண்ணுகிறோமே. யோபு மனம் தளராததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டதோடு, இறுதியில் மன உருக்கமும் இரக்கமும் உள்ள கர்த்தர் அவனுக்கு வழங்கிய நல்ல முடிவையும் கண்டீர்கள்.
12எனக்கு பிரியமானவர்களே, எல்லாவற்றிற்கும் மேலாக பரலோகத்தின் மேலோ, பூமியின்மீதோ அல்லது வேறு எதன்மீதோ சத்தியம் செய்ய வேண்டாம். நீங்கள் குற்றவாளிகளாய் தீர்க்கப்படாதபடி உங்கள் பேச்சு, ஆம் என்றால் “ஆம்” என்றும் இல்லை என்றால் “இல்லை” என்றும் இருக்கட்டும்.
விசுவாசமுள்ள மன்றாடல்
13உங்களில் யாராவது துன்பப்படுகிறீர்களா? அவர்கள் மன்றாடட்டும். யாராவது மகிழ்ச்சியாய் இருக்கின்றீர்களா? அவர்கள் துதிப் பாடல்களைப் பாடட்டும். 14உங்களில் யாராவது நோயுற்றிருக்கிறீர்களா? அவர்கள் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும். அவர்கள் கர்த்தருடைய பெயராலே எண்ணெய் பூசி அவனுக்காக மன்றாடுவார்கள். 15விசுவாசத்துடன் செய்யப்படும் மன்றாடல் நோயாளியைக் குணமடையச் செய்யும், கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். 16ஆகவே நீங்கள், உங்களுடைய பாவங்களை ஒப்புக்கொண்டு ஒருவருக்கொருவர் அறிவித்து, நீங்கள் குணமடைவதற்காக ஒருவருக்காக ஒருவர் மன்றாடுங்கள். ஒரு நீதிமானின் மன்றாடல் வல்லமையுடையதாகவும், பயனை விளைவிக்கின்றதாகவும் இருக்கின்றது.
17எலியாவும் நம்மைப் போன்ற ஒரு மனிதனே. அவன் பூமியின் மேல் மழை பெய்யக் கூடாது என்று உருக்கத்துடன் மன்றாடியபோது மூன்றரை வருடங்கள் மழை பெய்யவில்லை. 18அவன் மீண்டும் மன்றாடியபோது வானம் மழையைப் பொழிந்தது, பூமி அதன் விளைச்சலைக் கொடுத்தது.
19எனக்கு பிரியமானவர்களே, உங்களில் யாராவது சத்தியத்தைவிட்டு வழிவிலகிப் போகும்போது அவனை ஒருவன் நல்வழிக்கு மீட்டெடுத்துக் கொண்டுவந்தால், 20ஒரு பாவியை அவனுடைய வழியிலிருந்து திரும்பச் செய்கின்றவன், மரணத்திலிருந்து அவனது ஆத்துமாவை இரட்சித்து, ஏராளமான பாவங்களை மூடுகிறான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in