YouVersion Logo
Search Icon

யாக்கோபு 4

4
இறைவனுக்குப் பணிந்திருத்தல்
1உங்களிடையே சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏன் உண்டாகின்றன? உங்களுக்குள்ளே போரிடுகின்ற உங்கள் ஆசைகளினால் அல்லவா? 2நீங்கள் விரும்பியும் பெற்றுக்கொள்ளவில்லை. அதனால் கொலை செய்கின்றீர்கள். நீங்கள் பொறாமை கொண்டும் கிடைக்கவில்லை. அதனால், வாக்குவாதங்களிலும் சண்டைகளிலும் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் இறைவனிடம் மன்றாடுவதில்லை. அதனால் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றீர்கள். 3நீங்கள் கேட்டும் உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் தவறான நோக்கத்துடன் கேட்கின்றபடியால் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.
4நடத்தை கெட்ட துரோகிகளே! உலகத்துடனான நட்புறவு இறைவனுக்கெதிரான பகைமை என்பதை அறியாமல் இருக்கின்றீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகின்றவன், இறைவனுக்கு பகைவனாகிறான். 5மேலும், “நம்மில் வாழும்படி இறைவன் நமக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவர், ஆழமான அக்கறையுள்ளவராக இருக்கின்றார்” என்று வேதவசனத்தில் காரணமில்லாமல் சொல்லப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா? 6அதனால்,
“பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார்.
ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கின்றார்”#4:6 நீதி. 3:34
என்று வேதவசனம் சொல்கின்றது.
7எனவே இறைவனுக்கு அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான். 8இறைவனிடம் நெருங்கி வாருங்கள், அவரும் உங்களிடம் நெருங்கி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைக் கழுவுங்கள். இருமனம் உள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரியுங்கள். 9துக்கப்பட்டு அழுது புலம்புங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாகவும், உங்கள் மகிழ்ச்சியைத் துக்கமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். 10கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். அப்போது அவர் உங்களை உயர்த்துவார்.
11பிரியமானவர்களே, ஒருவரையொருவர் அவதூறாகப் பேசாதிருங்கள். யாராவது தனது சகோதரனுக்கு எதிராகப் பேசினால் அல்லது அவனைக் குற்றவாளியாகத் தீர்த்தால், அவன் இறைவனுடைய சட்டத்திற்கு எதிராய்ப் பேசுகின்றவனாகவும், இறைவனுடைய சட்டத்தையே நியாயம் தீர்க்கின்றவனாகவும் இருக்கின்றான். நீங்கள் இறைவனுடைய சட்டத்தைக் குற்றப்படுத்துகின்றபோது அதைக் கைக்கொள்கின்றவர்களாய் இல்லாமல் நியாயம் தீர்க்கின்றவர்களாய் இருக்கின்றீர்கள். 12ஒருவரே சட்டத்தைக் கொடுக்கின்றவரும், நீதிபதியுமாய் இருக்கின்றபடியால், அவரே நம்மை இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவராய் இருக்கின்றார். அப்படியிருக்க, உங்கள் அயலவனை நியாயம் தீர்க்க நீங்கள் யார்?
நாளைய தினத்தைக் குறித்த வீண்பெருமை
13“இன்று அல்லது நாளை இந்தப் பட்டணத்திற்கு அல்லது அந்தப் பட்டணத்திற்கு போவோம். அங்கு ஒரு வருடம் தங்கியிருந்து, வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று சொல்லுகின்றவர்களே! கேளுங்கள், 14நாளைக்கு உங்களுக்கு என்ன நிகழும் என்று உங்களுக்குத் தெரியாதே. உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? சற்று நேரம் தோன்றி மறையும் மூடுபனி போல் நீங்கள் இருக்கின்றீர்கள். 15எனவே, “கர்த்தருக்கு விருப்பமானால், நாங்கள் உயிரோடிருந்து இதை அல்லது அதைச் செய்வோம்” என்றே நீங்கள் சொல்ல வேண்டும். 16இப்பொழுதோ நீங்கள் அகந்தைகொண்டு பெருமையாகப் பேசுகின்றீர்கள். இவ்விதம் பெருமையாக பேசுவது யாவும் தீமையானவை. 17ஆகவே ஒருவன் நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் அது பாவம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in