யாக்கோபு 3
3
நாவை அடக்குதல்
1என் சகோதரரே, போதிக்கின்ற நாம் அதிக கண்டிப்புடன் தீர்க்கப்படுவோம் என்று நீங்கள் அறிந்து உங்களில் அநேகர் போதகர்கள் ஆகாதிருங்கள். 2நாம் எல்லோரும் அநேக விதங்களில் தவறிழைக்கிறோம். யாராவது ஒருவன் பேச்சுத் தவறாதவனாக இருந்தால், அவனே நிறைவான மனிதனும் தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவனுமாய் இருக்கின்றான்.
3குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படி அவைகளுடைய வாய்களில் கடிவாளம் போட்டு, அவைகளின் முழு உடலையும் கட்டுப்படுத்துகிறோம். 4கப்பல்களையும் பாருங்கள், அவை மிகப் பெரியவைகளாய் இருந்து பலத்த காற்றினாலே அடித்துச் செல்லப்பட்டாலும் கப்பலின் மாலுமி தான் விரும்புகின்ற திசையை நோக்கி ஒரு சிறு சுக்கானாலே அவற்றைத் திருப்புகிறான். 5அதேபோலவே நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருந்தாலும் பெருமளவில் பெருமை பேசுகின்றது. ஒரு சிறு நெருப்பு எவ்வளவு பெரிய காட்டையும் எரித்து விடுகிறது. 6நாவும் நெருப்பாக இருக்கின்றது. நமது உடலின் அங்கங்களில் நாவு ஒரு தீமை நிறைந்த உலகம். அது ஒருவனது சரீரத்தை முழுவதுமாக சீர்கெடுத்து அவனுடைய முழு வாழ்வையும் எரித்து விடுவதோடு, நரகத்தின் நெருப்பினால் கொளுத்தப்படுகின்றதாயும் இருக்கின்றது.
7எல்லாவிதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடல் வாழ் உயிரினங்களும் மனிதனால் கட்டுப்படுத்தப்பட்டன, கட்டுப்படுத்தப்படுகின்றன. 8ஆனால் நாவையோ ஒருவனாலும் கட்டுப்படுத்த முடியாது. அது அடங்காத தீயதும், மரணத்தை விளைவிக்கும் நஞ்சாயும் இருக்கின்றது.
9அதனாலே நமது ஆண்டவரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதனாலே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம். 10எனக்குப் பிரியமானவர்களே, ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகின்றன. இப்படி இருக்கக் கூடாதே. 11ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா? 12எனக்கு பிரியமானவர்களே, அத்தி மரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைக் கொடி அத்திப் பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல் உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதில்லை.
இரண்டு விதமான ஞானம்
13உங்களுக்குள்ளே ஞானமும் அறிவும் உள்ளவன் யார்? அவன் ஞானம் பிறப்பிக்கும் மனத்தாழ்மையினால் நல்ல நடத்தையினூடாக அதைக் காண்பிக்கட்டும். 14ஆனால், உங்கள் இருதயங்களில் கசப்பான வைராக்கியமும், சுயநலமான விருப்பமும் இருக்குமேயானால் அதைக் குறித்து பெருமைப்படாமலும், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசாமலும் இருங்கள். 15அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வந்ததல்ல. அது உலகத்துக்குரியதும், ஆவிக்குரிய தன்மையற்றதும், பேய்களுக்கு உரியதுமாக இருக்கின்றது. 16ஏனெனில் எங்கே பொறாமையும், சுயநலமான விருப்பமும் இருக்கின்றதோ அங்கே ஒழுங்கீனமும், எல்லாவித தீய செயல்களும் இருக்கின்றன.
17ஆனால் பரலோகத்திலிருந்து வருகின்ற ஞானமோ, முதலாவது தூய்மையானதாயும், பின்பு சமாதானம், தயவு, பணிவு, இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்தும், பக்கச்சார்பற்றும், போலியாக காணப்படாமலும் இருக்கின்றது. 18சமாதானத்தை ஏற்படுத்துகின்றவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கின்றார்கள்.
Currently Selected:
யாக்கோபு 3: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.