எபிரேயர் 6
6
1ஆகவே, நாம் கிறிஸ்துவைப் பற்றிய ஆரம்ப போதனைகளை மறுபடியும் அத்திவாரமாக இடாமல், முதிர்ச்சி அடையும்படியாக இவைகளைத் தாண்டி முன்னேறிச் செல்வோம். அவ்வடிப்படைப் போதனைகளாவன: பயனற்ற செயல்களிலிருந்து மனந்திரும்பி#6:1 மனந்திரும்பி – கிரேக்க மூலமொழியில் இந்த சொல்லின் அர்த்தம் பாவத்தைவிட்டு மனம் வருந்தி, மனந்திரும்பி இறைவனிடம் திரும்பு என்பதாகும். இறைவன் மேல் விசுவாசம் வைத்தல், 2ஞானஸ்நானங்களைப் பற்றிய உபதேசம், மன்றாடுதலின்போது கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளே. 3இறைவன் அனுமதிப்பாராயின், நாம் இப்படியே முதிர்ச்சியடையும்படி முன்னேறிச் செல்வோமாக.
4ஏனெனில் ஒரு காலத்தில் அறிவொளியைப் பெற்றவர்களாயும், பரலோகத்தின் கொடைகளை அனுபவித்தவர்களாயும், பரிசுத்த ஆவியானவரில் பங்கு பெற்றவர்களாயும் 5இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் அனுபவித்தவர்கள், 6வழிவிலகிப் போவார்களானால், அவர்களை மறுபடியும் மனந்திரும்புதலுக்குள் வழிநடத்துவது இயலாத காரியமே. அவர்கள் இறைவனின் மகனைத் திரும்பவுமாய் சிலுவையில் அறைந்து, அவருக்கு பகிரங்க அவமானத்தை எற்படுத்துகிறார்கள்.
7ஒரு நிலம் அதன்மீது அடிக்கடி பெய்யும் மழையைப் பருகி, அதில் பயிரிடுகின்றவர்களுக்கு பயனுள்ள விளைச்சலைக் கொடுக்குமானால் அது இறைவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறது. 8ஆனால் முள்ளையும் முட்புதர்களையும் முளைக்கச் செய்கின்ற நிலமோ, பயனற்றதாகவும் சாபத்திற்குட்படும் ஆபத்தான நிலையிலும் உள்ளது; அது எரிக்கப்பட்டு தனது முடிவை அடையும்.
9அன்புக்குரியவர்களே! நாங்கள் இவ்விதமாய் கடுமையாக பேசினாலும், நீங்கள் மேன்மையானவைகளையும் இரட்சிப்பைப் பற்றிய காரியங்களை பெற்றவர்களாயும் இருக்கின்றீர்கள் என உறுதியாய் நம்புகிறோம். 10உங்கள் வேலையையும், நீங்கள் அவருடைய மக்களுக்கு உதவி செய்வதனால் அவரிடத்தில் காட்டிய அன்பையும், நீங்கள் தொடர்ந்து உதவி வருவதையும் மறந்து விடுவதற்கு இறைவன் நியாயமற்றவர் அல்ல. 11உங்களுடைய எதிர்பார்ப்பை நிச்சயமாக்கிக்கொள்ளும்படி, முடிவு வரை நீங்கள் ஒவ்வொருவரும் அதே ஆர்வத்தைக் காண்பிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். 12நீங்கள் சோம்பேறிகள் ஆகிவிடக் கூடாது. விசுவாசத்தின் மூலமாயும், பொறுமையின் மூலமாயும் தங்களுக்கு வாக்குறுதி பண்ணப்பட்டதை உரிமையாக்கிக் கொண்டவர்களையே உங்களுக்கு முன்மாதிரியாகக்கொள்ள வேண்டும்.
இறைவனுடைய வாக்குறுதியின் நிச்சயம்
13இறைவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதியைக் கொடுத்தபோது இறைவன் தமது பெயரைக்கொண்டே ஆணையிட்டார். ஏனெனில் வேறு எந்தப் பெயரையும்கொண்டு ஆணையிடும்படியாக இறைவனைப் பார்க்கிலும் உன்னதமானவர் வேறு யாரும் இருக்கவில்லை. ஆதலால் இறைவன் தம் பெயரில் ஆணையிட்டு, 14“நான் உன்னை அபரிமிதமாக ஆசீர்வதித்து, உன் சந்ததியை அதிகமாக பெருகச் செய்வேன்”#6:14 ஆதி. 22:17 என்றார். 15எனவே ஆபிரகாம் பொறுமையோடு காத்திருந்து, தனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்.
16மனிதர்கள் தங்களைப் பார்க்கிலும் பெரியவர் ஒருவரின் பெயரைக்கொண்டே ஆணையிடுவது வழக்கம். பேசப்பட்ட எல்லாவற்றையும் உறுதி செய்து, எல்லா வாக்குவாதங்களுக்கும் முடிவைக் கொண்டுவருவது இந்த ஆணையே. 17இறைவன் தம்முடைய வாக்குறுதியின் வாரிசுகளுக்கு தமது நோக்கத்தின் மாறாத தன்மையை வெகு தெளிவாய்க் காண்பிக்க விரும்பினார். இதனாலேயே அவர் இதை ஒரு ஆணையினாலேயும் உறுதிப்படுத்தினார். 18எனவே இறைவன் இரண்டு மாறாத காரியங்களான வாக்குறுதியினாலும், ஆணையினாலும் இப்படிச் செய்தார். அவற்றைக் குறித்து, இறைவன் பொய் சொல்லுவார் என்பதோ முடியாத காரியம். எனவே நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த எதிர்பார்ப்பை பற்றிக்கொள்ள எல்லாவற்றையும்விட்டு ஓடி வந்த நாம், வெகுவாய் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார்.
19நம்முடைய ஆத்துமாவுக்கு உறுதியும், பாதுகாப்புமான ஒரு நங்கூரம் போலுள்ள இந்த எதிர்பார்ப்பு ஆலயத்தின் திரைச்சீலைகளுக்குப் பின்னால் உள்ள மகா பரிசுத்த இடம் வரைக்கும் உள்ளே செல்லுகிறது. 20நம்மைக் கடந்து எமக்கு முன்னோடியாக அங்கு போயிருக்கின்ற இயேசுவும், நமது சார்பாக அதற்குள் சென்றிருக்கிறார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றும் தலைமை மதகுருவாயிருக்கிறார்.
Currently Selected:
எபிரேயர் 6: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.