YouVersion Logo
Search Icon

கலாத்தியர் 6

6
எல்லோருக்கும் நன்மை செய்தல்
1பிரியமானவர்களே, எவராவது பாவச் செயல்களில் ஒன்றில் ஈடுபட்டு அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவரை சாந்தமுள்ள மனதோடு மீண்டும் நல்வழிக்குக் கொண்டுவர வேண்டும். நீங்களும் சோதனைக்கு உள்ளாகாதபடி உங்களைக் குறித்து கவனமாக இருங்கள். 2ஒருவர் சுமையை இன்னொருவர் சுமந்து, கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுங்கள். 3உண்மையில் வெற்று மனிதனாக இருக்கும் ஒருவன் தன்னை மேன்மையானவனாக எண்ணிக்கொண்டால் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். 4ஒவ்வொருவனும் தான் செய்வதை தானே பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அப்போது மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடாமல், தன்னுடைய செயலின் தன்மையிலேயே பெருமையடையலாம். 5ஒவ்வொருவனும் தன்னுடைய சுமைக்குத் தானே பொறுப்பாளியாவான்.
6இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கின்றவர்கள், கற்பிக்கின்றவர்களுடன் தம்மிடமுள்ள சகல நன்மைகளையும் பகிர்ந்துகொள்வார்களாக.
7ஏமாற வேண்டாம்; இறைவனை ஏளனத்துக்கு உள்ளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதனையே அறுவடை செய்வான். 8தன்னுடைய பாவ மனித இயல்புக்கு இசைவாக விதைக்கிற ஒருவன், பாவ மனித இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வான். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் விருப்பத்தின்படி விதைக்கிற ஒருவனோ பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடை செய்வான். 9நன்மை செய்வதை விட்டுவிடாமல் அதில் சோர்வடையாதவர்களாய் இருந்தால், ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம். 10ஆகவே நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எல்லா மக்களுக்கும், விசேடமாக விசுவாச குடும்பத்தினருக்கு நன்மையை செய்வோமாக.
புதிய படைப்பே முக்கியம்
11என்னுடைய சொந்தக் கைப்பட எவ்வளவு பெரிய எழுத்துக்களால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன் என்பதைப் பாருங்கள்.
12தங்கள் மனித இயல்பின் ஊடாக நல்லதொரு வெளித் தோற்றத்தைக் காண்பிக்க முயலுகின்றவர்களே விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவினுடைய சிலுவையின் பொருட்டு துன்புறுத்தப்படாதபடியே இப்படிச் செய்கின்றார்கள். 13விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களே நீதிச்சட்டத்தைக் கைக்கொள்ளாத போதிலும், உங்களுடைய உடலில் தாங்கள் பெருமிதமடைவதற்காகவே நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்வதை அவர்கள் விரும்புகிறார்கள். 14ஆனால் நானோ, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையைத் தவிர வேறு எதைக் குறித்தும் பெருமைகொள்வதில்லை. அவரால் இந்த உலகமானது என்னைப் பொறுத்தவரையில் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, நானும் உலகத்தைப் பொறுத்தவரையில் சிலுவையில் அறையப்பட்டவனாய் இருக்கின்றேன்.
15விருத்தசேதனம் செய்துகொள்வதோ, செய்யாமல் இருப்பதோ முக்கியமானவை அல்ல. புதிய படைப்பாவதே முக்கியமானது. 16இந்த ஒழுங்குவிதிப்படி நடக்கின்ற அனைவர் மேலும், இறைவனுடைய இஸ்ரயேலர்கள் மேலும் சமாதானமும் இரக்கமும் உண்டாவதாக.
17இனிமேலாவது ஒருவனும் எனக்குத் துன்பம் உண்டாக்காதிருக்கட்டும். ஏனெனில் இயேசுவின் தழும்புகளை நான் என் உடலில் சுமக்கின்றேனே.
18பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in