YouVersion Logo
Search Icon

எபேசியர் 2

2
கிறிஸ்துவில் உயிர் அடைதல்
1நீங்களோ ஒரு காலத்தில் உங்கள் நெறிமீறுதல்களினாலும்#2:1 நெறிமீறுதல்களினாலும் – கீழ்ப்படியாமையாலும் என்றும் மொழிபெயர்க்கலாம். பாவங்களாலும் உயிரற்ற நிலையில் இருந்து, 2அவற்றில் வாழ்ந்து வந்தீர்கள். இந்த உலகத்தின்#2:2 உலகத்தின் – கிரேக்க மொழியில் இந்தக் காலத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு, ஆகாயத்து ஆட்சியாளனின் வழிகளுக்கேற்ப#2:2 ஆகாயத்து ஆட்சியாளனின் வழிகளுக்கேற்ப – ஆகாயத்து ஆவிக்குரிய சக்திகளின் அதிகாரிக்கு என்றும் மொழிபெயர்க்கலாம். வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அந்தத் தீய ஆவியானது இப்போது கீழ்ப்படியாதவர்களில்#2:2 கீழ்ப்படியாதவர்களில் – கிரேக்க மொழியில், கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் என்றுள்ளது. செயலாற்றுகிறது. 3நமது பாவ மனித இயல்பிலிருந்து எழும் ஆசைகளின்படி வாழ்ந்து, எமது உடலிலும் சிந்தனையிலும் இருந்து எழுகின்ற இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்றவர்களாக ஒரு காலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்து வந்தோம். அவர்களைப் போலவே நாமும் இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய்#2:3 கோபத்துக்கு உட்பட்டவர்களாய் – கிரேக்க மொழியில் கோபத் தண்டனையின் பிள்ளைகளாக இருந்தோம். 4ஆனால் மிகுந்த இரக்கமுடைய இறைவன்,#2:4 மிகுந்த இரக்கமுடைய இறைவன் – கிரேக்க மொழியில், இரக்கத்தில் செல்வந்தரான என்றுள்ளது. நம்மீது கொண்ட மிகுந்த அன்பின் காரணமாக, 5நெறிமீறுதல்களினால் உயிரற்ற நிலையில் இருந்த நம்மை கிறிஸ்துவுடன் உயிரடையச் செய்தார். இறைவனுடைய கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கின்றீர்கள். 6கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கின்ற நம்மை உயிருடன் எழுப்பி, அவரோடு பரலோகத்தின் உயர்வான இடங்களில் அமரும்படி செய்தார். 7கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கின்ற நமக்கு, அவர் காட்டிய தயவின் மூலமாக அவரது கிருபையின் அளவற்ற நிறைவை இனிவரும் காலங்களில் காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். 8விசுவாசத்தின் மூலமாய், கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானது அல்ல. இது இறைவனுடைய கொடை. 9இது மனித செய்கைகளினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக் குறித்து ஒருவரும் பெருமை பாராட்ட முடியாது. 10ஏனெனில், நாம் செய்யும்படி இறைவனால் முன்னரே ஆயத்தம் செய்யப்பட்டதான நற்செயல்களைச் செய்கின்றவர்களாய் நாம் வாழும்படி,#2:10 நற்செயல்களைச் செய்கின்றவர்களாய் நாம் வாழும்படி – கிரேக்க மொழியில், நல்ல செயல்களில் நடப்பதற்கு என்றுள்ளது. கிறிஸ்து இயேசுவில் படைக்கப்பட்ட இறைவனது கைவண்ணமாக நாம் இருக்கின்றோம்.
அனைவரும் கிறிஸ்துவில் இணைக்கப்படுதல்
11ஆகையால், தங்களை “விருத்தசேதனம் பெற்றவர்கள்” என்று சொல்லிக்கொள்பவர்களால், “விருத்தசேதனம் அற்றவர்கள்” என ஒரு காலத்தில் நீங்கள் அழைக்கப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களது விருத்தசேதனமோ மனித கைகளால் உடலில் மாத்திரம் செய்யப்பட்ட ஒன்று. 12அக்காலத்தில் நீங்கள் கிறிஸ்துவோடு தொடர்பு இல்லாதவர்களாகவும், தெரிவு செய்யப்பட்ட மக்களாகிய இஸ்ரயேலருக்குரிய குடியுரிமை அற்றவர்களாகவும், வாக்குறுதியின் உடன்படிக்கைகளை பொறுத்தவரை அந்நியர்களாகவும், எதிர்பார்ப்பு இல்லாதவர்களாகவும், இறைவன் அற்றவர்களாகவும் இந்த உலகத்தில் வாழ்ந்தீர்கள். 13ஆனாலும், ஒரு காலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்போது இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, கிறிஸ்துவின் இரத்தத்தால் அருகில் வந்திருக்கிறீர்கள்.
14ஏனெனில் இரு பிரிவினராக இருந்த நம்மிடையே உள்ள சமாதானம் கிறிஸ்துவே. அவரே இரு பிரிவினரையும்#2:14 இரு பிரிவினரையும் – இது யூதர், யூதர் அல்லாதோர் என்ற இரு பிரிவினரைக் குறிக்கின்றது. ஒன்றாக்கித் தடையாயிருந்த பகைமைச் சுவரைத் தமது சரீர மரணத்தினாலே தகர்த்து,#2:14 மரணத்தினாலே தகர்த்து – கிரேக்க மொழியில், உடலினாலே தகர்த்து என்றுள்ளது. 15கட்டளைகளும் விதிமுறைகளும் அடங்கிய நீதிச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்கினார். இந்த இரு பிரிவினரையும் தம்மில் இணைந்திருக்கும் ஒரு புது மனித இனமாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தவே அப்படிச் செய்தார். 16தமது சிலுவை மரணத்தினால்#2:16 சிலுவை மரணத்தினால் – கிரேக்க மொழியில், சிலுவையின் மூலமாக என்றுள்ளது. இரு பிரிவினரையும் ஒரே உடலில் இறைவனுடன் ஒப்புரவாக்கி, அதனூடாக அவர்களிடையில் உள்ள பகைமையை கொன்று அழித்தார். 17அவர் வருகை தந்து, தூர விலகி இருந்த உங்களுக்கும்,#2:17 தூர விலகி இருந்த உங்களுக்கும் – யூதரல்லாத உங்களுக்கும் என்றும் மொழிபெயர்க்கலாம் அருகில் இருந்த அவர்களுக்கும்#2:17 அருகில் இருந்த அவர்களுக்கும் – யூதர்களுக்கும் என்றும் மொழிபெயர்க்கலாம் சமாதானத்தை நற்செய்தியாகப் பிரசங்கித்தார். 18எனவே பிதாவை அணுகுகின்ற தகுதியை இரு பிரிவுகளைச் சேர்ந்த நாமும் ஒரே ஆவியானவரால் கிறிஸ்து#2:18 கிறிஸ்து – கிரேக்க மொழியில் அவர் என்றுள்ளது மூலமாக பெற்றிருக்கிறோம்.
19ஆகையால், யூதரல்லாதவர்களாகிய நீங்கள், இனி வெளிநாட்டவர்களோ தற்காலிக குடிமக்களோ அல்ல. இப்போது நீங்களும் இறைவனுடைய மக்களுடன் குடியுரிமை பெற்றவர்களாகவும், இறைவனுடைய குடும்ப அங்கத்தினர்களாகவும் இருக்கின்றீர்கள். 20மேலும், அப்போஸ்தலர்களையும் இறைவாக்கினர்களையும் அத்திவாரமாகக்கொண்டு கட்டப்பட்டு, கிறிஸ்து இயேசுவை அனைத்தையும் இணைக்கும் பிரதான மூலைக்கல்லாகக் கொண்ட கட்டடமாக இருக்கின்றீர்கள். 21கிறிஸ்துவிலே அந்த முழுக் கட்டடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாகும்படி வளர்ச்சி பெறுகிறது. 22கிறிஸ்துவிலே நீங்களும் இறைவன் குடியிருக்கும் இடமாக ஆவியானவரில் ஒன்றிணைத்து கட்டப்படுகின்றீர்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for எபேசியர் 2